அமெரிக்க எல்லையில் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையின் வலி, ஹாங்காங் போராட்டத்தின் பின்னேயுள்ள கோபமும் உணர்ச்சிகளும், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்திய பேரழிவு. இவை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'த்ரூ த லென்ஸ்' எனும் புகைப்பட, காணொளிக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள படங்களுள் சில.
தேசிய அரும்பொருளகத்தில் நேற்று தொடங்கி இம்மாதம் 27ஆம் தேதி வரை இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் உள்ளூர், அனைத்துலகப் புகைப்படக் கலைஞர்கள் எடுத்த 250க்கும் மேற்பட்ட, மனதை உலுக்கும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புகைப்படக் கண்காட்சி, உலகச் செய்தித்துறை புகைப்படக் கண்காட்சி என இரு அங்கங்களாக இக்கண்காட்சி இடம்பெறுகிறது.
அதிகாரபூர்வமாக நேற்று தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கண்காட்சியைத் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பார்வையிட்டார்.
"நிகழ்வுகளை, நடப்புகளைச் சொல்வதில் வலிமையான ஊடகமாகத் திகழும் புகைப்படக் கலையின் ஆற்றலை எண்ணி வியக்க இக்கண்காட்சி வாய்ப்பளிக்கிறது," என்றார் அமைச்சர்.
"நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக காட்சி செய்தித்துறை விளங்குகிறது," என்றார் எஸ்பிஎச் நிறுவனத்தின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ்.
கண்காட்சியைப் பார்வையிட அனுமதி இலவசம்.

