இலவச மருந்து விநியோக சேவைக்கு வரவேற்பு

இலவச மருந்து விநியோக சேவைக்கு வரவேற்பு

2 mins read
327c1d41-5fdf-45c3-845b-da85e4edf1dc
-

சிங்ஹெல்த் குழுமத்தில் அங்கம் வகிக்கும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கிய இலவச மருந்து விநியோக சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 270 மருந்து விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் பராமரிப்புச் சேவையின் அணுகுமுறையை மேம்படுத்தும் வகையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்து விநியோகச் சேவைக்கு புதிய வழிகாட்டிகள் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டன.

சன்டெக் சிட்டி கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 29வது சிங்கப்பூர் மருந்தியல் மாநாட்டில் சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்லின் டோங் கலந்துகொண்டார்.

சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தளவாட சேவை வழங்குநர்களுக் கான வழிகாட்டிகள் 'சிங்கப்பூர் ஸ்டான்டர்ட் 644' என்று அழைக்கப் படுகிறது.

விநியோகத்தின்போது மருந்து களின் முறையான சேமிப்பு, பாது காப்பு, மருந்து இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தல் மற்றும் மருந்துகளின் இடர்காப்பு ஆகியவை குறித்த முறையான வழிகாட்டி களைக் கொண்டது 'சிங்கப்பூர் ஸ்டான்டர்ட் 644' ஆவணம்.

"இந்த வழிகாட்டிகளின் மூலம் நோயாளிகளும் பராமரிப்பாளர் களும் மருத்துவமனைச் சூழ் நிலைக்கு அப்பால் மருந்துகள் பத்திரமாக, சுகாதாரமான முறையில் தங்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்துகொள்ளலாம்.

"மேலும் மருந்துகளில் கூடுதல் கவனம் செலுத்துவதை விடுத்து, தங்கள் சுகாதார, பராமரிப்புப் பொறுப்புகளில் அவர்கள் அதிக கவனம் செலுத்தலாம்," என்று அமைச்சர் டோங் தெரிவித்தார்.

வீடுகளுக்கு மருந்துகளை இலவசமாக விநியோகிக்கும் சேவை இதர தேசிய நிபுணத்துவ சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், சிங்ஹெல்த் குழுமத்தின் பலதுறை மருந்தகங்கள், தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் பலதுறை மருந்தகங்கள், தேசிய பல்கலைக்கழக பலதுறை மருந்தகங்கள், தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் டான் டோக் செங் மருத்துவமனை ஆகியவற்றிலும் கிடைக்கும்.

சிங்கப்பூர் மருந்தியல் சங்கம், சிங்கப்பூர் உற்பத்தித்துறை சம்மேளனத்தின் தர மேம்பாட்டு அமைப்பு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் கீழ் இயங்கும் சிங்கப்பூர் தர மன்றம் ஆகியவை இணைந்து இந்த வழிகாட்டிகளைக் கூட்டாக உருவாக்கியுள்ளன.

"மருந்துகளை விநியோகிக்கும் போது அவற்றின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் முக்கியத்துவத்தை சம்மேளனம் வலியுறுத்துகிறது.

"இந்தச் சேவை சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று திடமாக நம்புகிறோம். மேலும் மருந்துகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதால், இது

மூப்படையும் மக்கள் தொகைக்கு நல்ல பலனை அளிக்கும்," என்றார் சிங்கப்பூர் உற்பத்தித்துறை சம்மேளனத்தின் தலைவர் திரு டக்லஸ் ஃபூ.