வாழ்க்கையில் சந்தித்த சவால்களை எதிர்கொண்டு முன்மாதிரியாகத் திகழும் இரு பெண்களுக்கு நேற்று முன்தினம் விருது வழங்கப்பட்டது.
'முன்மாதிரி தாயார்' விருதை 64 வயதுடைய திருவாட்டி ஜமாலியா ஷரிஃப் வென்றார். 17 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தான நிலையில், தங்க இடம் இல்லாமல் தம்முடைய மூன்று பிள்ளைகளையும் கரை சேர்க்க திருவாட்டி ஜமாலியா மிகவும் சிரமப்பட்டார்.
கிடைத்த வாடகை வீட்டில் இருந்துகொண்டு தனக்கிருந்த தொடக்கப்பள்ளி படிப்புக்கு ஏற்ற ஒரு குறைந்த சம்பள வேலையில் சேர்ந்தார்.
இன்று இவரின் மூன்று பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்துள்ளனர். மூத்த மகன் சேவைத் துறையில் உள்ளார். இரண்டாவது மகன் ஒரு தொழில்முனைவராகவும் இளைய மகள் சாங்கி பொது மருத்துவ மனையில் ஒரு மருத்துவராகவும் இருக்கின்றனர். தமக்கு ஏற்பட்ட சோதனைகளிலிருந்து மீண்டு மற்ற தாயார்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் திருவாட்டி ஜமாலியாவுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் விருது வழங்கினார்.
'முன்மாதிரி இளம் தாயார்' என்று சென்ற ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விருது, 38 வயதான திருவாட்டி பெரிய நாயகி மணிவாசகத்திற்கு வழங்கப்பட்டது.
பாலர் பள்ளி ஆசிரியராக இருக்கும் திருவாட்டி பெரிய நாயகி, மூன்று பிள்ளைகளுக்குத் தாய். இவர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சிறுவர்களுக்கு இலவச நடன வகுப்பும் நடத்தி வருகிறார்.
இருவருக்கும் 'ஜமியா சிங்கப்பூர்' அமைப்பு விருதுகளை வழங்கியது.

