சிங்கப்பூரின் முதல் அறிவார்ந்த சமூக மன்றம்

சிங்கப்பூரின் முதல் அறிவார்ந்த சமூக மன்றம்

2 mins read
88aea249-d198-4bf8-8b63-a730b2fd4725
புதிதாக மேம்படுத்தப்பட்ட ராடின் மாஸ் சமூக மன்றத்தில் எல்லா வயதினருக்கும் ஏற்ற வசதிகள் உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நாட்டின் சமூக மன்றங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பதை ராடின் மாஸ் சமூக மன்றத்திற்குச் செல்வோர் தெரிந்துகொள்ளலாம். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற கட்டடப் பணிகள் முடிந்து நேற்று சமூக மன்றம் மீண்டும் திறக்கப்பட்டது.

பல்வேறு மின்னிலக்க வசதி களுடன் புதிதாக மேம்படுத்தப்பட்ட ராடின் மாஸ் சமூக மன்றம், சிங்கப்பூரின் முதல் அறிவார்ந்த சமூக மன்றமாக விளங்குகிறது. சமூக மன்றத்தில் அமைந்திருக்கும் மின்நூலக இயந்திரங்கள்மூலம் வட்டாரக் குடியிருப்பாளர்கள், 'இ-பேப்பர்' எனும் இணைய நாளிதழ், 'இ-புக்ஸ்' எனும் இணைய நூல்கள் போன்றவற்றை வாசிக்கலாம்.

அத்துடன் 24 மணிநேரமும் இயங்கி வரும் சுய சேவை இயந்திரங்கள்வழி, பொதுமக்கள் வகுப்பு களுக்கும் வசதிகளைப் பயன் படுத்துவதற்கும் தாங்களே பதிவுசெய்துகொள்ளலாம்.

கட்டடம் முழுவதும் உள்ள அறைகளுக்குள் செல்ல சாவிகள் இனி இருக்காது. சமூக மன்றத்தினரும் நடவடிக்கையை நடத்தும் பயிற்றுநர்களும் அதற்குப் பதிலாக முக அடையாளக் கருவிகள்மூலம் அறைகளுக்கான கதவுகளைத் திறப்பர். தொண்டூழிய நல அமைப்பான சிங்கப்பூர் சிறுவர் சங்கமும் ராடின் மாஸ் சமூக மன்றத்துடன் ஒரே இடத்தில் அமைந்துள்ளது மற்றும் ஒரு சிறப்பாகும். ஆறு மாடிக் கட்டடத்தின் ஒரு மாடியில் மூத்தோருக்கான நடவடிக்கை நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.

ராடின் மாஸ் வட்டாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால் சமூக மன்றத்தில் உள்ள மின்னிலக்க வசதிகள்மூலம் முதியோரின் பயன்பாட்டைச் சோதித்துப் பார்க்க இது வாய்ப்பளிக்கும் என்று திறப்பு விழாவில் கலந்துகொண்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சேம் டான் கூறினார்.

சமூக மன்றத்தில் அமைந்துள்ள அறிவார்ந்த வசதிகள் தொடர்பில் கருத்துகள் திரட்டி, அவற்றை மக்கள் கழகத்திடம் கொடுத்து, அடுத்த தலைமுறைக்கான சமூக மன்றங்கள் மேலும் எவ்வாறு அறிவார்ந்த முறையில் இயங்கலாம் என்பதைத் திட்டமிடவும் முடியும் என்று அவர் விவரித்தார்.

இச்சமூக மன்றம் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்றாக இருப்பதுடன் பல தலைமுறைகள் கலந்துறவாடவும் வாய்ப்புகள் இருக்கும் என்றார். நேற்றை நிகழ்வில் வர்த்தக, தொழில் அமைச்சரும் மக்கள் கழகத் துணைத் தலைவருமான சான் சுன் சிங் கலந்துகொண்டு சமூக மன்ற வசதிகளைப் பார்வையிட்டார்.