ஒளி வெள்ளத்தில் மிளிரும் இஸ்தானா

ஒளி வெள்ளத்தில் மிளிரும் இஸ்தானா

2 mins read
dd7cd13b-7a46-4e66-b078-1e116f0bfe1a
இரவில் வண்ண விளக்குகளில் மிளிர்ந்த இஸ்தானா கட்டடம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொதுமக்களுக்காக முதன்முறையாக இரவு நேரத்தில் தன் கதவுகளை நேற்று திறந்தது இஸ்தானா. 150 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்பு கொண்ட இஸ்தானாவின் கதை நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

அதிபர் ஹலிமா யாக்கோப், அவர் கணவர் திரு முகம்மது அப்துல்லா அல்ஹப்ஷி தலைமையிலான இந்நிகழ்ச்சி, கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இஸ்தானாவின் 150ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்வாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியைக் காண 2,000க்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். இரவு மலர, இஸ்தானாவின் கட்டடச் சுவர்களில் வண்ணங்களை அள்ளி வீசும் கண்கவர் பிம்பங்களும் காட்சிகளும் இஸ்தானாவின் வரலாற்றை எடுத்துரைத்தன.

கடந்த ஓராண்டில் இஸ்தானாவின் ஐந்து பொது வரவேற்பு நிகழ்வுகளில் 90,000 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்ற தகவலும் வெளியிடப்பட்டது.

பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், மூத்த அமைச்சர்கள் டியோ சீ ஹியன், தர்மன் சண்முகரத்னம், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், முன்னாள் அதிபர் டோனி டான், அவரது துணைவியார் மேரி டான், சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோஃப் இஷாக்கின் துணைவியார் நூர் அயிஷா, முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் துணைவியார் ஊர்மிளா நாதன் ஆகியோருடன் அமைச்சரவை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் இஸ்தானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

1869ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இஸ்தானா கட்டடம், காலனித்துவ ஆளுநர்களின் இல்லமாகவும் பின்னர் சில முன்னாள் அதிபர்களின் இல்லமாகவும் திகழ்ந்துள்ளது.