போதைப்பொருள் வைத்திருந்த ஓர் ஆடவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவரைப் பலமுறை வதைத்த மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
வேண்டுமென்றே தாக்கியதன் தொடர்பிலான மூன்று குற்றச்சாட்டுகள், 32 வயது வெங்கடேஷ் ராஜ் நயினார் நாகராஜன் மீது (Vengedesh Raj Nainar Nagarajan) நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சுமத்தப்பட்டன. வெங்கடேஷ் குற்றவாளி என்பது உறுதியானால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியிலுள்ள சிஎன்பி புளோக் பி அலுவலகத்தின் மூன்றாவது மாடியிலுள்ள ஓர் அலுவலக அறையில் அந்த ஆடவரை வதைத்ததாக வெங்கடேஷ் குற்றம் சாட்டப்படுகிறார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி அதிகாலை 5.58 மணிக்கும் 9.30 இடையே இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆடவரின் கைப்பையில் போதைப்பொருள் இருந்தது குறித்து அவரிடம் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக வெங்கடேஷ் அவரை அடித்து உதைத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
15,000 வெள்ளி பிணை வழங்கப்பட்ட வெங்கடேஷ், நம்பவர் மாதம் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவேண்டும்.

