அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்பும் கட்சி சார்ந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு உயர்கல்விக் கழகங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்ற கவலை ஆதாரமற்றதல்ல என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் கூறியிருக்கிறார். யேல்-என்யுஎஸ் கல்லூரி பரிந்துரைத்த "கருத்து மாறுபாடும் எதிர்ப்பும்" என்ற தலைப்பிலான பாடத்தொகுதியின் விவரங்களைப் பார்த்தபோது கல்வி அமைச்சுக்கு இந்தக் கவலை எழுந்ததாகத் திரு ஓங் திங்கட்கிழமை (அக்டோபர் 7) நாடாளுமன்றத்திடம் கூறினார்.
உள்ளூர் கவிஞரும் நாடகாசிரியருமான அல்ஃபியான் சா'அட் நடத்தவிருந்த இந்தப் பாடத்தொகுதி, தொடங்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகக் கல்லூரியால் ரத்து செய்யப்பட்டது.
எதிர்ப்பு முழக்கவரி அட்டைகள் செய்வதும், ஹொங் லிம் பூங்காவிலுள்ள பேச்சாளர் சதுக்கத்திற்குச் செல்வதும் பாடத்தொகுதியில் உள்ளடங்கியதாகத் திரு ஓங் விவரித்தார்.
பொது ஒழுங்கு தொடர்பான குற்றங்களுக்காக முன்னதாகத் தண்டிக்கப்பட்ட திரு ஜொலொவன் வாம், திரு சீலன் பாலே, "குறிப்பிடத்தக்க அளவு வெளிநாட்டு நிதியளிப்பு" பெறும் "நியூ நெரடிஃப்" ஊடகத்தளத்தின் குமாரி கிர்ஸ்டன் ஹான், டாக்டர் தம் பிங் ஜின் ஆகியோருடனான உரையாடல்களும் பாடத்தொகுதியில் இடம்பெற்றிருந்தன.
திரு அல்ஃபியான் 1998ஆம் ஆண்டு எழுதிய "சிங்கப்பூர், நீ என் நாடு அல்ல" என்ற தலைப்பிலான கவிதையின் வரிகளையும், அவர் கூறிய வேறு சில கருத்துகளையும் திரு ஓங் சுட்டிக்காட்டினார்.
"சிங்கப்பூரில் மாணவ ஆர்ப்பாட்ட எழுச்சியை உயிர்ப்பிப்பது, குறிப்பாக அரசியல் மனசாட்சி உணர்வு ஆக்கம் போன்ற துறைகளில்" பற்றி வார இறுதியில் திரு அல்ஃபியான் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டதாகவும் திரு ஓங் தெரிவித்தார். "அரசியல் மனசாட்சி உணர்வு என்பது தீவிர இடசாரி சிந்தனையிலிருந்து வருகிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையிலுள்ள அடக்குமுறைகளை உணர்ந்து, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கச்செய்யும் மனக்கொந்தளிப்பைத் தூண்டுவது இதன் நோக்கம். இப்படித்தான் திரு அல்ஃபியான் தமது திட்டப்பணியைக் கருதினார்."
பாடத்தொகுதிக்குப் பொறுப்பானவர்கள் சிங்கப்பூரைப் பற்றி தத்தம் கருத்துகளையும் உணர்வையும் கொண்டிருக்கும் உரிமை உள்ளது என்றார் அமைச்சர்.
"அவர்கள் அதுபற்றி எழுதலாம், சமூக ஊடகத்திலும் வெளிப்படுத்தலாம்," என்றார் திரு ஓங். "ஆனால், இத்தகைய அரசியல் எதிர்ப்புகள் நமது கல்விக் கழகங்களில் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படலாமா என்பதையும், கட்டாய, மதிப்பெண் அளிக்கும் பாடத்தொகுதிகளாக நடத்தப்படலாமா என்பதையும் நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இன்டான் அசுரா மொக்தார், திரு சியா கியன் பெங், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் வால்டர் தசேரா ஆகியோரின் கேள்விக்குப் பதிலளித்த திரு ஓங், பாடத்தொகுதி ரத்து தொடர்பில் பல கருத்துகள் எழுந்ததாகத் தெரிவித்தார். சிலர் மறுப்பு தெரிவித்த போதிலும், யேல்-என்யுஎஸ் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல கல்வியாளர்கள் ரத்தை ஆதரித்தனர்.
பொதுமக்கள் பலரும்கூட இத்தீர்மானத்தை ஆதரித்தனர். ஆனால் "எளிமையான, அடிப்படையான ஒரு காரணத்திற்காக என திரு ஓங் கூறினார். "எதிர்ப்பை வெளிப்படுத்த நமது கல்விக் கழகங்களில் மாணவர்களுக்குக் கற்றுத்தருவதையும் தூண்டுவதையும் ஆதரிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என அவர்கள் கருதுகின்றனர்," என்றார் அவர்.
இந்நிலையில், கல்வித்துறையின் சுதந்திரத்தை அமைச்சு மதிப்பதாகவும் நாடாளுமன்றத்திற்குத் திரு ஓங் உறுதியளித்தார்.
"ஆயினும், உலகின் இன்றைய நிலையில், மறைமுகமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்தச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் இருக்கத்தான் செய்வார்கள் என்பதையும் நாம் அறிந்திருக்கவேண்டும்," என்றார் அவர். "நாம் போற்றிப் பாதுகாப்பதைப் பாதுகாத்திட, சூழ்நிலை எழும்போது அதனைப் பாதுகாக்க நாம் தயாராக இருக்கவேண்டும். கல்வித்துறையின் சுதந்திரம் அரசியலுக்குக் கல்விக் கழகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்கவில்லை. ஏனெனில், அது கல்விக் கழகத்தின் கல்வித் தரத்தையும் பொது நிலைப்பாட்டையும் கீழறுத்துவிடும்," என்பதைத் திரு ஓங் சுட்டிக்காட்டினார்.

