சிங்கப்பூரில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அந்தச் சாதனங்கள் முற்றிலும் தடை செய்யப்படலாம்.
அரசாங்கம் வெறு வழியின்றி இந்தத் தடையைச் செயல்படுத்தலாம் என்று கூறிய போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி, பயன்பாட்டாளர்களைப் பொறுப்புடன் இருக்குமாறும் மற்றவர்களைப் பற்றி சிந்திக்குமாறும் ஊக்குவித்துள்ளார்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களுடன் தொடர்புடைய விபத்துகளும் தீச்சம்பவங்களும் அதிகரித்துவரும் வேளையில் அந்தச் சாதனங்களின் பயன்பாடு மேலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் திட்டங்களை அரசாங்கம் ஆழமாக மறுஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய டாக்டர் ஜனில், புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் சாலைப் போக்குவரத்து, பாதசாரிகள் மற்றும் சைக்கிள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் ஆகியவற்றுக்கான பாதைகள் தெளிவாகவும் தனித்தனியாகவும் வகுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆயினும், இத்தகைய சாதனங்களுக்கான பிரத்யேகமான பாதைகள் தற்போதைய குடியிருப்புகளில் இல்லை என்று கூறிய டாக்டர் ஜனில், இதனைச் சமாளிக்க நிலப்போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
விபத்துகள் அடிக்கடி நிகழும் இடத்தை அடையாளம் கண்டு, அங்கெல்லாம் பாதுகாப்பைத் துரிதமாக அதிகரிக்க ஆணையம், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்றுவதாக டாக்டர் ஜனில் கூறினார்.
நடைபாதைகளை அகலமாக்குவது, வேகத்தைக் கட்டுப்படுத்தும் கோடுகளை அமைப்பது உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யோசிக்கப்பட்டுள்ளன.
"தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்காகவும் சைக்கிள்களுக்காகவும் தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதைகளின் மேம்பாட்டை நாங்கள் துரிதப்படுத்துவோம்," என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார். இருந்தபோதும் கட்டமைப்பு தொடர்பான இந்த மேம்பாடுகளை நிறைவேற்ற சில ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தனிநபர் நடமாட்டச் சாதன விபத்துகளால் அண்மையில் இருவர் மாண்டதன் தொடர்பில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோது டாக்டர் ஜனில் இவற்றையெல்லாம் கூறினார்.
செப்டம்பர் 24ஆம் தேதி, தானா மேரா கோஸ்ட் ரோட்டில் தனது மின்-ஸ்கூட்டரிலிருந்து விழுந்த 30 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளே, தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் மோதப்பட்ட 65 வயது திருவாட்டி ஓங் பீ எங் படுகாயங்களுக்குப் பலியானார். பிடோக் வட்டாரத்தில் செப்டம்பர் 21ஆம் தேதி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அந்த மூதாட்டியை மோதிய தனிநபர் நடமாட்டச் சாதனம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை டாக்டர் ஜனில் சுட்டினார். மறைந்த திருவாட்டி ஓங்கின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் அனுதாபப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
சைக்கிள் பாதைகளிலும் பூங்காக்களை இணைக்கும் பாதைகளிலும் இந்தச் சாதனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. நடைபாதைகளில் அனுமதிக்கப்படும் வேக வரம்பு மணிக்கு 10 கிலோமீட்டர்.
பொது நடைபாதைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்ப அபாயத்தைக் குறைக்கவும் ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்த சில திட்டங்களைப் போக்குவரத்து அமைச்சு மறுஆய்வு செய்யும். இந்த மறு ஆய்வு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017ஆம் ஆண்டிலும் 2018ஆம் ஆண்டிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் தொடர்பில் 228 விபத்துகள் ஏற்பட்டன. அவற்றில் 196 விபத்துகள் காயங்களை விளைவித்தன.
இவ்வாண்டின் முதற்பாதியில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் தொடர்பில் குடியிருப்பு வட்டாரங்களில் குறைந்தது எட்டு தீச்சம்பவங்கள் நடந்தன. புக்கிட் பாத்தோக்கில் இதுபோன்ற ஒரு தீ விபத்தில் 40 வயது ஆடவர் உயிரிழந்தார்.

