சிங்கப்பூரில் வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வது எப்படி என்பதற்கு இலக்கணமாகத் திகழும் மூன்று குடும்பங்கள் யூஹுவா தனித்தொகுதியில் வசிக்கின்றனர். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கலாசார, சமூக, இளையர் அமைச்சருமான கிரேஸ் ஃபூ, இந்தக் குடும்பங்களின் கதையை நாடாளுமன்றத்தில் இன்று எடுத்துரைத்தார். நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் ஒவ்வொரு சிங்கப்பூரரும் ஆற்றவேண்டிய பங்கின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் சட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களைப் பற்றி திருவாட்டி ஃபூ நாடாளுமன்றத்தில் பேசியபோது, கிறிஸ்துவரான சீன வட்டாரவாசி ஒருவர் தம்மிடம் கூறிய கதை ஒன்றைப் பகிர்ந்தார். அந்தப் பெண், பள்ளியிலிருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு அழைக்கச் செல்லும்போது அவரது மற்றொரு பிள்ளையை முஸ்லிம் அண்டை வீட்டார் ஒருவர் பார்த்துக்கொள்ள உதவுகிறார். அத்துடன் அவரது இந்து அண்டை வீட்டார் தமது குடும்பத்துடன் அவ்வப்போது உணவு பகிர்வர். இந்த மூன்று குடும்பங்களின் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து அனைவரின் வீடுகளிலும் விளையாடுவர்.
"தமது அண்டை வீட்டாரின் அன்பையும் பெருந்தன்மையையும் உண்மையாக பாராட்டுவதால் அந்த வட்டாரவாசி இதனை எனது கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கெல்லாம் மேலாக, இன,சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இந்த உறவை மெத்தனமாக கருதக்கூடாது என்பது அவருக்குத் தெரியும்," என்றார் திருவாட்டி ஃபூ
"வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த அண்டை வீட்டாருக்கிடையே நிலவும் இத்தகைய நம்பிக்கைப் போக்குடைய, இதமான உறவுகள் சிங்கப்பூர் எங்கிலும் காணப்படலாம். இதுவே சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்குமான அழகு," என்று அவர் சொன்னார்.
சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க சட்டப் புதுப்பிப்புகள் தேவை என்றாலும் தற்போதைய நிலவரத்தைக் கட்டிக்காக்க சட்டங்களை இயற்றினால் மட்டும் போதாது என்று அந்த அமைச்சர் கூறினார்.
" மேலும் அடிப்படையான நிலையில் பார்த்தோமானால், நியாயமற்ற அச்சங்களையும் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த அனைவரையும் ஒரே விதமாக நினைக்கும் மனப்போக்கையும் அகற்ற எங்களால் சட்டம் இயற்ற முடியாது. நமது சொந்த நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்ட பிற நம்பிக்கைகளும் நம்முடன் இணக்கத்துடன் இருக்க முடியும் என்பதை பிறர் ஏற்றுக்கொள்ள வைக்கவும் சட்டம் இயற்ற முடியாது," என்றார் அவர்.

