சமய நல்லிணக்கப் போக்கு சிங்கப்பூரில் உயர்மட்டத்தில் இருக்கும் நேரத்தில் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தை மேம்படுத்தும் முயற்சிகள் காலத்துக்குப் பொருத்தமானவை என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சமயம் சார்ந்த சம்பவங்கள், வெறுப்பூட்டும் பேச்சுகள் என்னும் உலக நிலவரத்தினிடையே இம்முயற்சிகள் எடுக்கப்படுவதாக இன்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார். சட்டத்திற்கான உத்தேச மாற்றங்கள் குறித்த விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய திரு சண்முகம், பொதுமக்கள் கூட்டத்தின் மீதான தாக்குதல்களுக்கும் வெறுப்பை அணிதிரட்டுவதற்கும் இணையமும் சமூக ஊடகமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொன்னார். ஒரு நாட்டின் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடும் போக்கும் அதிகரித்து வந்துள்ளதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.
அதற்கு சில உதாரணங்களையும் அவர் மேற்கோள் காட்டினார். ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் எதிரான பதற்றத்தைத் தோற்றுவிக்கும் வலசாரி இயக்கங்கள், வெறுப்புணர்வை இணையம்வழி பரவச் செய்வதற்கான வழிகாட்டுதல்கள், 2014ல் இந்தியாவில் திரித்து வெளியிடப்பட்ட இந்து கடவுள்களின் படங்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டபோது அதனை எதிர்த்து நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டது போன்றவற்தை திரு சண்முகம் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார்.
உலக நிலவரங்கள் இவ்வாறு இருப்பினும் சிங்கப்பூர் இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து விலகி நிற்பதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் பிற நாடுகளில் ஏற்படும் சம்பங்களால் சிங்கப்பூர் எளிதாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் கூறினார். சிங்கப்பூர் அரசாங்கம் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எல்லா சமயத்தவரையும் சமயக் குழுக்களையும் சரிசமமாக நடத்தி வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இங்குள்ள கொள்கைகளும் சட்டங்களும் அமைதி, நல்லிணக்கத்துக்கான காரணங்கள் என்றார்.
2014ஆம் ஆண்டின் பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை உலகிலேயே சிங்கப்பூர்தான் சமய சமத்துவம் மிக்க சமூகம் என்று குறிப்பிட்டதை திரு சண்முகம் எடுத்தியம்பினார். சட்டத்தில் மாற்றங்களை உத்தேசிப்பதற்கு முன்னர் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த சமூகங்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு அவற்றின் ஆதரவு பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

