வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் (பிஎம்டி) அனைத்தும் ஈராண்டு களுக்கு ஒரு முறை கட்டாய சோதனைக்குச் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார்.
பிஎம்டி சாதனங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களும் அவற்றை முறையாகப் பதிவு செய்து, சோதித்து பின்னரே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என் றும் அவர் தெரிவித்தார். பிஎம்டி சாதனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியிருந்தாலும் அச்சோதனை கால அடிப்படையிலானதா அல்லது ஒரு முறை செய்யக் கூடியதா என்று தெரிவிக்கவில்லை. அதற்கு இப்போது உறுதியான விடை கிடைத்துள்ளது.
வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், சட்டவிரோதமாக பிஎம்டி சாதனங்களில் மாற்றங்கள் செய்யும் போக்கைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் சொன்னார். மின் ஸ்கூட்டர்களுக்கான கட்டாய சோதனை தீவெங்கும் ஒன்பது இடங்களில் மேற்கொள்ளப்படும். அவ்வாறு செய்யத் தவறுவோருக்கு $1,000 வரையிலான அபராதம் அல்லது மூன்று மாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

