இவ்வாண்டு இறுதிக்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு குறையக்கூடும் என டிபிஎஸ் வங்கி வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர். அதாவது, ஒரு அமெரிக்க டாலருக்கு 1.42 சிங்கப்பூர் வெள்ளி என்ற நிலையை அது எட்டலாம்.
சீன நாணயத்தின் மதிப்பு வலுவிழந்து காணப்படுவது, அமெரிக்க-சீன வர்த்தகப் போர் நீடித்து வருவது, சிங்கப்பூர் வளர்ச்சி தகவல் ஏமாற்றமளிப்பது ஆகியவற்றுக்கு மத்தியில் டிபிஎஸ் வல்லுநர்கள் மேற்கண்ட முன்னுரைப்பை வெளியிட்டனர்.
நேற்று இரவு 8 மணியளவில், ஒரு அமெரிக்க டாலருக்கு 1.3817 வெள்ளி என்ற நிலையை சிங்கப்பூர் நாணயம் எட்டியது.
"சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்புக்கான முன்னுரைப்பு குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூர் பொருளியல், உலகின் ஆகப் பெரிய இரு பொருளியல்களுக்கு இடையே நிலவும் பதற்றநிலையால் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடியதாக உள்ளது.
"ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பிரெக்சிட் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலை, பலவீனமடைந்து வரும் ஜெர்மனி பொருளியல் உள்ளிட்ட அம்சங்களால் ஐரோப்பிய நாடுகளின் பொருளியல் மந்தநிலைக்குத் தள்ளப்படக்கூடும்," என்று அந்த வல்லுநர்கள் விவரித்தனர்.
இந்நிலையில், அமெரிக்க-சீன வர்த்தகப் போர் தணியாவிடில், அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு இவ்வாண்டு இறுதிக்குள் S$1.40 என்ற அளவைத் தாண்டக்கூடும் என்பதே வல்லுநர்களின் கணிப்பு.

