டெப்போ ரோடு கோயில் அருகே வாகனங்கள் நிறுத்தப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர்

டெப்போ ரோடு கோயில் அருகே வாகனங்கள் நிறுத்தப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர்

2 mins read
bed004c1-8330-43e9-a8de-fefed0008ef3
-

டெப்போ ரோடு ஸ்ரீருத்ரகாளியம்மன் ஆலயம் அருகில் உள்ள குறுஞ்சாலையில் வாகனம் நிறுத்தப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் ஹிங் கியாங் தெரிவித்துள்ளார்.

டெப்போ வாக் என்னும் அந்தச் சாலையில் கார் நிறுத்தக்கூடாது என்பதற்கான அறிவிப்புப் பலகைவைக்கப்பட்டபோதிலும் அதனை சிலர் கண்டுகொள்ளாமல் கார்களை நிறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சனிக்கிழமை கோயிலுக்குச் சென்று திரும்பிய மூன்று வயது சிறுவன் கார் ஒன்றின் முன் தவறுதலாக விழுந்த விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பல்லாயிரம் பேரால் பார்க்கப்பட்டது. பதற வைக்கும் அந்த காணொளியைக் கண்டோர் மேலும் அதுபோன்றதொரு விபத்து நேராமல் தவிர்க்கும் வழிகளை யோசனையாகத் தெரிவித்து வருகின்றனர்.

சிறுவன் சாலையைக் கடந்து ஓடியபோது அங்கு ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்ததும் எதிரே வந்த காரோட்டியால் சிறுவன் வருவதைக் கவனிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு முக்கிய காரணம் என்றும் பேசப்பட்டது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறப்பினர் திரு லிம்மை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டு கருத்து கேட்டது.

நிலைமையை ஆராய்ந்து தீர்வு காண நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து போலிஸ் ஆகியவற்றுடன் வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் இணைந்து பணியாற்றும் என்று அவர் அந்த செய்தித்தாளிடம் கூறினார்.

இதற்கிடையே, மோதிய காரின் ஓட்டுநரே இறங்கி வந்து சிறுவனை அவனது தாயாருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கோயில் பிரதிநிதி ஒருவரை மேற்கோள் காட்டி வான்பாவ் சீன நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 7.15 மணியளவில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள போலிஸ் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.