இந்திய இனத்து மாணவிகளுக்கு இடையிலான மோதலில் ரத்தக் களறி

இந்திய இனத்து மாணவிகளுக்கு இடையிலான மோதலில் ரத்தக் களறி

2 mins read
e484d0e8-8175-4c2c-b15b-8d04fa7eac1f
-

ஐடிஇ மேற்குக் கல்லூரிக்கு அருகிலுள்ள மேம்பாலத்தில் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவிகளுக்கு இடையே மூண்ட வாக்குவாதம் இறுதியில் ரத்தக் களறியில் முடிந்தது. 18 வயது துஷெடா சரவணன், மடக்கும் கத்தியைப் பயன்படுத்தி 17 வயது மாணவி லோகேஸ்வரி நடராஜாவின் வயிற்றில் குத்தினார். லோகேஸ்வரியின் இடது கரத்தையும் அந்தப் பெண் கத்தியால் கீறினார்.

ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயத்தை விளைவித்ததற்கு துஷெடாவை குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. நேர்மையற்ற முறையில் மற்றவரின் பொருளை அபகரித்த குற்றச்சாட்டும் பொது இடத்தில் ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்த குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

துஷெடாவின் செயல்கள் மிகவும் ஆபத்தானவை எனக் கூறிய மாவட்ட நீதிபதி எடி தாம், அவர் சீர்திருத்த பயிற்சிக்குத் தகுந்தவரா என்பது ஆராயப்படவேண்டும் என அரசுதரப்பு வழக்கறிஞர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு உடன்பட்டார்.

பிப்ரவரி 21ஆம் தேதி ஐடிஇ மேற்குக் கல்லூரிக்கு அருகே லோகேஸ்வரியும் அவரது மூன்று நண்பர்களும் மேம்பாலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது துஷெடாவுடன் இரண்டு நண்பர்கள் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததை லோகேஸ்வரி கண்டார்.

இந்த இரண்டு பெண்களுக்கும் இதற்கு முன்னர் அறிமுகமில்லை. 'கிரீன் டீ' குடித்துக்கொண்டிருந்த லோகேஸ்வரி, துஷெடாவைக் கண்டபோது காரணமின்றி அவர் மீது அதை ஊற்றினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

லோகேஸ்வரி அங்கிருந்து சென்று மைலோ நிறைந்த கிண்ணத்துடன் திரும்பினார். துஷெடா அதற்குள்ளாகத் தனது காலுறைக்குள் வைத்திருந்த மடக்கும் கத்தியை எடுத்து சட்டைப் பைக்குள் வைத்தார். தனது முகத்தில் அப்போது மைலோவை ஊற்றிய லோகேஸ்வரியை துஷெடா கத்தியால் தாக்கினார். துஷெடா அத்துடன் நின்றுவிடாமல் லோகேஸ்வரியின் தங்க நகையை எடுத்து அதனை விற்பதற்காகத் தனது நண்பரிடம் கொடுத்ததாக த நியூ பேப்பர் நாளிதழ் தெரிவித்தது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட துஷெடா அடுத்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் செல்வார்.