கட்டட மேற்கூரை விளிம்பில் காணப்பட்ட சிறுவன்

ஜூரோங் வட்டாரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கட்டட மேற்கூரை சுவரின் விளிம்பில் சிறுவன் நின்றுகொண்டிருந்ததைக் கண்ட குடியிருப்பாளர் ஒருவர் உடனே விரைந்து அவன் கீழே குதிப்பதைத் தடுக்க முற்பட்டார். அந்தச் சிறுவனின் நண்பர்கள் அவனைக் கீழே குதிக்கச் சொல்லி ஊக்கம் கொடுத்துக்கொண்டிருந்ததாக 33 வயது ஹுவாங் செங்ஃபா தெரிவித்தார்.

ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93லுள்ள புளோக் 989சி-யில் இந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் நேர்ந்ததாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. 

சிறுவன் ஆபத்தான முறையில் கூரையின் விளிம்பில் இருந்ததைக் கண்டு தாம் உடனே அவன் இருந்த இடத்திற்கு விரைந்ததாகத் திரு ஹுவாங் கூறினார். தாம் வருவதைக் கண்ட அந்தச் சிறுவன், உடனே அந்தச் சுவரிலிருந்து இறங்கியதாகவும் மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாகவும் திரு ஹுவாங் சொன்னார்.

இந்தச் சம்பவம் குறித்து திரு ஹுவாங் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து, கட்டட மேற்கூரைக்கு இட்டுச்செல்லும் கதவு இப்போது தாழிடப்பட்டுள்ளது.