உலகிலேயே பொருளியலில் போட்டித்தன்மை கொண்ட நாடு என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. போட்டித்தன்மைமிக்க நாடுகளின் வரிசையில் 2வது இடத்திலிருந்த சிங்கப்பூர் இவ்வாண்டு முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
முதல் இடத்தில் இருந்த அமெரிக்கா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 141 நாடுகளின் பொருளியல் அம்சங்களை மதிப்பிட்டு இந்தப் பட்டியலை உலக பொருளியல் மன்றம் தயாரித்துள்ளது. நூறு புள்ளிகளில் சிங்கப்பூர் 84.8 புள்ளிகளைப் பெற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்கா 83.7 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்துக்கு வந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவைவிட சிங்கப்பூர் ஒரு புள்ளி அதிகமாகப் பெற்று இவ்வாண்டு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
"ஏற்கெனவே உயர் இடத்தில் இருந்த சிங்கப்பூர் மேலும் மேம்பட்டுள்ளது," என்று போட்டித்தன்மைமிக்க நாடுகளின் பட்டியலை வெளியிட்ட உலக பொருளியல் மன்றம் தெரிவித்தது.
பன்னிரண்டு அம்சங்களின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன. இதில் உள்கட்டமைப்பு, குடிமக்களின் ஆரோக் கியமான ஆயுட்கால ஆண்டுகள், தொழிலாளர் சந்தை ஆகிய மூன்று அம்சங்களில் சிங்கப்பூர் முதல் நாடாக வந்துள்ளது.
இதற்கிடையே இதன் தொடர்பில் ஃபேஸ்புக்கில் தமது கருத்தைப் பதிவிட்ட வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், "வலுவான பொருளியல் அடிப்படைகளைக் கொண்ட சிங்கப்பூர் மற்ற போட்டி நாடுகளுடன் சிறந்து விளங்குவதை இது பிரதி பலிக்கிறது," என்றார்.
"இருந்தாலும் சிறிய, வெளிப்படையான பொருளியல் நாடான சிங்கப்பூர் இதனை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது," என்று அவர் கூறினார்.
"தற்போதைய நிச்சயமற்ற பொருளியல் சூழ்நிலையில் சிங்கப்பூர் விடாமுயற்சியுடன் உழைத்து முன்னணியில் இருக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
"நமது வலுவான அடிப்படைகளை தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும், நமது நிறுவனங்களின் ஆற்றல்களை மேம்படுத்த வேண்டும், தொழிற்துறைகள் உருமாற வேண்டும், நமது ஊழியர்கள் தகுந்த திறன்களைப் பெற்று போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும்," என்று மேலும் அமைச்சர் சான் தெரிவித்தார்.
நிதி நடைமுறைகள், சந்தை செயல்திறன், பெரும் பொருளியல் ஆகிய அம்சங்களிலும் சிங்கப்பூர் முன்னணியில் இருப்பதாக பொருளியல் மன்றத்தின் அறிக்கை குறிப்பிட்டது. ஆனால் கடந்த ஆண்டு 58வது இடத்திலிருந்த இந்தியா, இவ்வாண்டு 68வது இடத்துக்கு இறங்கியுள்ளது. இலங்கை 84வது, பங்ளாதேஷ் 105வது, நேப்பாளம் 108வது, பாகிஸ்தான் 110வது இடத்தில் வந்துள்ளன.

