காலாங் தீயணைப்பு நிலையம் அதிகாரபூர்வமாகத் திறப்பு

காலாங் தீயணைப்பு நிலையம் அதிகாரபூர்வமாகத் திறப்பு

2 mins read
8edcdba5-f8b4-4f93-bfc8-18c7634b3af7
-

பெரிய நிகழ்வுகளின்போது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, போலிஸ் மற்றும் இதர அமைப்புகள் ஒருங்கிணைந்த செயல்முறையில் ஈடுபட முடியும்.

காலாங் தீயணைப்பு நிலையத்தில் அமைந்துள்ள உள்துறை குழு ஒருங்கிணைந்த நிலையம், அத்தகைய பெரிய நிகழ்வுகளின்போது கட்டளைகளைப் பிறப்பிக்கும் கூட்டுத் தளபத்தியமாக விளங்கும்.

காலாங் தீயணைப்பு நிலையத்தை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்த சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், சிங்கப்பூர் விளையாட்டு மையத்திற்கும் நகர்ப்பகுதிக்கும் அருகில் இந்த நிலையம் அமைந்திருப்பதால் இங்கு உள்துறைக் குழு ஒருங்கிணைந்த நிலையம் அமைந்திருப்பது பொருத் தமானது எனக் கூறினார்.

"உள்துறைக் குழுக்களுக்கிடையே கூடுதல் கூட்டு முயற்சி எடுக்கப்படுவதற்கான சிறந்த தளம் இது," என்றார் அவர்.

காலாங் தீயணைப்பு நிலையத்தின் மேல்மாடியில் உள்துறைக் குழு ஒருங்கிணைந்த நிலையம் அமைந்துள்ளது.

போலிஸ், குடிமைத் தற்காப்புப் படை, இதர அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவதற்கு பிரதான தளபத்திய அறை ஒன்றும் அந்நிலையத்தில் உள்ளது.

ஃபார்முலா 1 விரைவு கார் பந்தயம், தேசிய தினம் உள்ளிட்ட பெரிய அளவிலான நிகழ்வுகளின்போது போலிஸ் படையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் இந்த ஒருங்கிணைந்த நிலையத்தைப் பயன்படுத்த முடியும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செயலாக்கப் பிரிவு இயக்குநரான உதவி ஆணையர் டேனியல் சீட் கூறினார்.

இத்தகைய கூட்டு நடவடிக்கைகளுக்கு இடவசதி வழங்குவதற்கு, காலாங் தீயணைப்பு நிலையம் 14,000 சதுர மீட்டர் ஒட்டுமொத்த தரை பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்நிலையத்தில் பெரிய எண்ணிக்கையிலான அவசரகால வாகனங்களை நிறுத்திவைக்க முடியும்.

நேற்றைய நிகழ்ச்சியின்போது சீருடை அதிகாரிகளுக்கு 'ஆப்ஸ்-டெக்' எனப்படும் புதிய வாழ்க்கைத்தொழில் பாதையையும் திரு சண்முகம் அறிவித்தார்.

தினசரி செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை அதிகாரிகள் ஒருங்கிணைக்க உதவும் வண்ணம் அவர்களுக்கு நிபுணத்துவப் பயிற்சி அளிக்கப்படும்.