சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக (எஸ்யுஎஸ்எஸ்) மாணவர்கள், கடந்த நான்கு ஆண்டு
களாக தங்களுக்கு மத்தியில் பயின்ற "அமைதியான" மாணவர் ஒருவரை அதிகம் கவனித்து இருக்க மாட்டார்கள்.
எனவே, இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் இளைய மகன்தான் இவர் எனத் தெரிய வந்ததும் மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
எஸ்யுஎஸ்எஸ்-இன் பட்டமளிப்பு விழாவில் நேற்று 24 வயது கேசாங் பங்கரெப்பிற்கு பட்டமளிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஓய்வுத்தளச் சந்திப்புக்காக சிங்கப்பூர் வந்துள்ள அதிபர் ஜோக்கோ, இந்த விழாவில் கலந்துகொண்டார். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் கல்வி அமைச்சர் ஓங் யி காங்கும் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை புரிந்தனர்.
இவ்வாண்டு திரு கேசாங்குடன் பட்டம் பெற்றும் அவரது காதலியான ஃபலிஷா என்பவரும் பட்டமளிப்பு விழாவில் இருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பல்கலைக்கழகத்தில் சந்தித்திருப்பர் என அறியப்படுகிறது.
நேற்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு ஏறத்தாழ 2,000 எஸ்யுஎஸ்எஸ் மாணவர்கள் பட்டக் கல்விச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வர்.
சந்தைப்படுத்துதல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற திரு கேசாங், தொழில்முனைப்புக்காக நேற்று கௌரவிக்கப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவர்.
தலைமைத்துவம் உள்ளிட்ட தொழில்முனைப்புத் திறனை வெளிப்படுத்திய மாணவர்களை இந்த விருது அங்கீகரிக்கிறது. ஒவ்வொரு வெற்றியாளருக்கும் $5,000 வழங்கப்பட்டது.
திரு கேசாங் ஆறு தொழில்
களைத் தொடங்கினார். அவற்றில் ஒன்றான 'தெர்னாகோப்பி' எனப்படும் காப்பி விநியோக சின்னம், முதலீட்டாளர்களிடமிருந்து ஆரம்ப நிதியுதவியைப் பெற்றது.
பட்டமளிப்பு விழா முடிந்தவுடன் ஊடகங்களிடம் பேசிய திரு கேசாங், தமது தந்தையையும் மூத்த சகோதரர் ஜிப்ரான் ரக்கபுமிங்கையும் மதியுரைஞர்களாக தாம் கருதி யதாகக் கூறினார்.
"அரசியலில் கால்பதிப்பதற்கு முன்னால் எனது தந்தை தொழிலதிபராக இருந்தார். எனது அண்ணனும் தொழிலதிபராக இருந்தார். எனவேதான், எனக்கு தொழில்
முனைவராக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது," என்றார் அவர்.
எஸ்யுஎஸ்எஸ்-இல் மேற்படிப்பைத் தொடர்வதற்கு முன்னதாக ஆங்கிலோ-சீன அனைத்துலகப் பள்ளியில் பயின்ற திரு கேசாங், சிங்கப்பூருக்கு வந்த பிறகுதான் ஆங்கில மொழியைத் தாம் கற்றுக்கொண்டதாகச் சொன்னார்.
32 வயதாகும் திரு ஜிப்ரானும் சிங்கப்பூரில் படித்தவர். 2007ஆம் ஆண்டில் எம்டிஐஎஸ் கழகத்தில் கல்வியை முடித்த அவர், சிட்னியில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
திரு கேசாங்கின் மூத்த சகோதரியான கஹியாங் அயு, 28, இந்தோனீசியாவின் ஜாவாத் தீவின் சோலோ நகரிலுள்ள செபெலஸ் மாரெட் பல்கலைக்கழகத்தில் உணவுத் தொழில்நுட்பத் துறையில் பயின்று 2013ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.

