இனிப்புப் பானங்களில் சர்க்கரை அளவைக் காட்டும் முத்திரை

இனிப்புப் பானங்களில் சர்க்கரை அளவைக் காட்டும் முத்திரை

2 mins read
23d96b6c-b4ac-4223-808b-c0ca5809edf9
-

நீரிழிவு நோய்க்கு எதிரான சிங்கப்பூரின் போர், அதிக அளவு சர்க்கரை உள்ள பானங்களின் விளம்பரங்களுக்கு எதிரான தடையுடன் தொடர்கிறது. இத்தகைய தடையைச் செயல்படுத்தும் முதல் நாடாக சிங்கப்பூர் உள்ளது. இத்தகைய பானங்களுடன், மிதமான அளவு சர்க்கரை உள்ள பானங்களும், அவை உடலுக்கு ஆரோக்கியமற்றவை எனக் காட்டும் ஒட்டுவில்லை ஒன்றைக் கொண்டிருக்கவேண்டும்.

திடீர் பானங்கள், இனிப்புப் பானங்கள், பழச்சாறுகள், தயிர் ஆகிய தயாரிப்புகளும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் பொருட்களில் உள்ளடங்கும். எப்போது இந்த மாற்றங்கள் நடப்புக்கு வரும் என்பது 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்படும். இதன் அமலாக்கம் ஓராண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம்.

இதனை வியாழக்கிழமை (அக்டோபர் 10ஆம் தேதி) அறிவித்த சுகாதார மூத்த துணையமைச்சர் எட்வின் டோங், தகவல்களை நன்கறிந்து முடிவு செய்ய மக்களை ஊக்குவிப்பது இந்த மாற்றங்களின் ஒரு நோக்கம் எனக் கூறினார். இனிப்புப் பானங்களின் சர்க்கரை அளவைக் குறைக்க ஊக்குவிப்பது இந்நடவடிக்கையின் மற்றொரு நோக்கம் என்றும் அவர் கூறினார்.

பானங்களிலுள்ள சர்க்கரை அளவைத் தரவாரியாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட நிறத்திலான ஒரு முத்திரை வழங்கப்படும். ஆரோக்கியமானது, ஆரோக்கியமற்றது, மிதமானது என்ற மூன்று தரநிலைகளில் ஒன்றை இந்த முத்திரை குறிக்கும். ஒவ்வொரு வகை பானத்திற்கும் எந்தத் தரநிலை கொடுக்கப்படும் என்பது அவற்றிலுள்ள சர்க்கரை அளவைப் பொறுத்துள்ளது. ஆனால் அது மட்டும் கருத்தில் கொள்ளப்படாது. சில காப்பி வகைகளில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பின் அளவு அவற்றுக்கான தரநிலை மதிப்பீட்டைப் பாதிக்கும்.

சிங்கப்பூர் சுகாதார மற்றும் உயிரியல் மருத்துவக் கூட்டத்தில் பேசிய திரு டோங், வாடிக்கையாளர்கள் சரியான முடிவெடுக்க இந்த ஒட்டுவில்லையைப் பயன்படுத்துமாறு உற்பத்தியாளர்களை ஊக்குவித்தார்.

சிங்கப்பூரில் பெரும் பிரச்சினையாக இருக்கும் நீரிழிவு நோய்க்கு எதிரான போரில் இந்நடவடிக்கை அங்கம் வகிக்கிறது. சிங்கப்பூரில் இருப்பவர்கள் நாள்தோறும் உட்கொள்ளும் 12 மேசைக்கரண்டி அளவு சர்க்கரையில் பாதிக்குமேல் இனிப்புப் பானங்களிலிருந்து வருவதாகக் கடந்தாண்டில் நடத்தப்பட்ட கருத்தாய்வு ஒன்று காட்டுகிறது.