கையூட்டு பெற்றதன் தொடர்பில் சிங்கப்பூரர்கள் மீது குற்றச்சாட்டு

கையூட்டு பெற்றதன் தொடர்பில் சிங்கப்பூரர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
46800317-e357-4fc5-adb5-72e9ee930f14
இரண்டு சிங்கப்பூரர்களுக்குக் கையூட்டு கொடுத்த 24 வயது மலேசியர் டே ஹுவீ நீட்டோ மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

கையூட்டு பெற்றதன்பேரில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் சேவை அதிகாரியும், அவருக்கு உடந்தையாக இருந்த ஒரு பெண்ணும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

சிங்கப்பூர் நிரந்தரவாசம் பெற விரும்பிய மலேசியப் பெண்ணின் விண்ணப்பத்தைத் துரிதப்படுத்த 49 வயது சிங்கப்பூரர் லூசி டியோவும் 28 வயது ஷேரன் லூ வாய் வூனும் 1,500 வெள்ளியை நேர்மையற்ற முறையில் பெற்றதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மலேசியரான 24 வயது டே ஹுவீ நீட்டோ மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி டியோவும் லூவும் தலா இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத்தண்டனையுடன் 100,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் மத்திய அடையாள, பதிவு தகவல் கட்டமைப்புக்குள் அதிகாரமின்றி நுழைந்ததன் தொடர்பிலான 20 குற்றச்சாட்டுகளையும் டியோ எதிர்நோக்குகிறார். கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்படி டியோவுக்கு 5,000 வரையிலான அபராதம் அல்லது ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

டியோவுக்கு 1,500 வெள்ளி கையூட்டு கொடுத்ததன் தொடர்பில் 24 வயது மலேசியர் டே ஹுவீ நீட்டோ இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இதற்காக அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையுடன் 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்