கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாக $40 மில்லியன் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மோசடியுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒப்புக்கொண்டார்.
$4 மில்லியனுக்கு அதிகமான கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தை 51 வயது வின்சென்ட் பீட்டர் புரிந்ததாகக் கூறப்படுகிறது. வின்சென்ட் இந்த மோசடி தொடர்பாக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆறாவது நபராவார். 58 வயது மாணிக்கம் பிரகாசம், 33 வயது ரோஜர் குவேக் சி குவாங் உட்பட நால்வர் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 4ஆம் தேதியன்று முன்னாள் கைதியான 47 வயது ஆங் செங் குவான் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் உட்பட பல குற்றங்களைப் புரிந்ததாக ஒப்புக்கொண்டார்.
அவருக்கு எதிராக இம்மாதம் 18ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதியிலிருந்து நவம்பர் மாதம் 1ஆம் தேதி வரை புரியப்பட்ட மோசடி மூலம் பெறப்பட்ட $4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வின்சென்ட வைத்திருந்தார்.
அவருக்கு எதிராக அடுத்த மாதம் 8ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றச் செயல்கள் மூலம் பெறப்படும் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டின்கீழும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $500,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

