சுடச் சுடச் செய்திகள்

சம்பளம் தரத் தவறக்கூடிய நிறுவனங்களை மனிதவள அமைச்சு கண்காணிக்கிறது

சம்பளம் தரத் தவறுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் முதலாளிகள், குறித்த தேதியில் சம்பளத்தைக் கொடுத்து வருகிறார்களா என்பதை இப்போது மனிதவள அமைச்சிடம் தெரியப்படுத்தவேண்டும்.  தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்தி அடையாளம் காணப்படும் இத்தகைய முதலாளிகளுக்கு, இவ்வாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் 200 கடிதங்களை அமைச்சு அனுப்பியிருக்கிறது. 

வெளிநாட்டு ஊழியர் தீர்வையைத் தாமதமாகச் செலுத்துதல் அல்லது பணச் சிரமத்தில் இருத்தல் போன்ற விவரங்களின் அடிப்படையில் இந்த முதலாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.  இந்நிறுவனங்கள் காலந்தவறாமல் சம்பளம் கொடுத்து வருவதாக அமைச்சிடம் உறுதிசெய்த பிறகு, ஊழியர்கள் பிற்பாடு புகார் செய்தால், பொய்யான உறுதி அளித்ததற்காக நிறுவனங்கள் தண்டிக்கப்படலாம். 

மொத்தம் 100 கட்டுமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருந்த முன்னோட்ட நடவடிக்கை சென்ற ஆண்டு நடத்தப்பட்டது. ஊழியர்கள் உதவி கேட்பதற்கு முன்பாகவே நான்கு நிறுவனங்களில் 123 சம்பளப் பாக்கிகள் கண்டறியப்பட்டு, $300,000 சம்பளப் பாக்கி முன்கூட்டியே மீட்டுத்தரப்பட்டது.  வேலை நியமனச் சட்டத்திற்கு நிறுவனங்கள் உட்படுவதை உறுதி செய்வதற்காக மனிதவள அமைச்சு மேற்கொள்ளும் புதிய உத்திகளில் இதுவும் ஒன்று. அமைச்சும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) முதல்முறையாக வெளியிட்ட வேலை நியமனத் தர அறிக்கையில் இந்த உத்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 

முதலாளிகள் சட்டப்படி தேவைப்படும் பத்திரங்களை வைத்திருக்காவிட்டால் அல்லது காட்டாவிட்டால், சம்பள சர்ச்சையில் ஊழியரின் ஆதாரத்திற்கு அல்லது கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது மற்றோர் உத்தி. 

சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி 2017 ஏப்ரல் முதல் தேதி அமைக்கப்பட்டதிலிருந்து சென்ற ஆண்டு இறுதி வரையிலான நிலவரத்தைப் புதிய அறிக்கை ஆராய்கிறது. வேலை சார்ந்த கோரிக்கைகள் நடுவர் மன்றத்திடம் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக முத்தரப்புக் கூட்டணி சர்ச்சைகளுக்குத் தீர்வு காண முயல்கிறது.  மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் மொத்தம் 17,038 வேலை சார்ந்த கோரிக்கைகளும் மேல்முறையீடுகளும் அமைச்சிடமும் முத்தரப்புக் கூட்டணியிடமும் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் 87 விழுக்காடு சம்பளம் தொடர்பானவை. 

சம்பளக் கோரிக்கைகள் 2017ஆம் ஆண்டில் ஆயிரம் ஊழியரில் 2.49 ஆகவும், 2018ல் 2.42 ஆகவும் இருந்தது. ஆனால், வெளிநாட்டவரிடையில்தான் சம்பள கோரிக்கைகள் ஆக அதிகமாக இருந்தன. சென்ற ஆண்டு ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களில் 4.45 பேர் சம்பளக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்தனர். உள்ளூர் ஊழியர்களில் இந்த விகிதம் 1.43.  பரிசீலிக்கப்பட்ட காலகட்டத்தில் சம்பளக் கோரிக்கைகள் செய்தவர்களில் சுமார் பாதி பேர் வெளிநாட்டவர்கள். அவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டு ஊழியர்கள் இரண்டு முதல் ஆறரை மாதச் சம்பளத்தைக் கோரினர். உள்ளூர் ஊழியர்கள் அரை மாதம் முதல் இரண்டு மாதச் சம்பளத்திற்குக் கோரிக்கை செய்தனர்.