அதிபர் ஹலிமா: பெண்களிடையே போதைப் புழக்கத்தை ஒழிக்க அதிக முயற்சிகள் தேவை

வனிசா (உண்மை பெயர் அல்ல) போதைப் புழக்கத்திலிருந்து மீண்டு வருகிறார். ஐஸ் போதைப் பொருளைப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட அவர் ஏறக்குறைய ஓராண்டு காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக மறுவாழ்வு இல்லத்தில் போதைப் பொருள் அடிமையிலிருந்து மீண்டு வருகிறார். இன்னும் நான்கு மாதம் அவர் இல்லத்தில் இருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் தனது ஆறு வயது மகனைக் காண அவர் ஆவலுடன் இருக்கிறார்.

“ஒரு வருடமாக என்னுடைய மகனைப் பார்க்கவில்லை. நான் சிைறயில் அடைக்கப்பட்டதால் மகனைப் பிரிந்து வாழ்ந்து வந்தேன். நான் தற்போது திருந்தி வாழ்வதற்கு என்னுடைய மகன்தான் முக்கிய காரணம். நான் வெளியே ெசன்றதும் மகனுக்காக வேலைக்குப் போவேன்,” என்று வனிசா கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் பெண்களுக்காக உள்ள ஒரே மறுவாழ்வு இல்லமான ‘டர்னிங் பாயிண்ட்’ அவரை போதைப் புழக்கத்திலிருந்து மீட்டு வருகிறது.

இதற்கிைடயே ‘டர்னிங் பாயிண்ட்’ இல்லத்துக்கு நேற்று வருகையளித்த அதிபர் ஹலிமா யாக்கோப், பெண்களிடையே போதைப் புழக்கத்தை ஒழிக்க அதிக முயற்சிகள் தேவை என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வனிசா உட்பட அங்குள்ளவர்களைச் சந்தித்த அதிபர் ஹலிமா யாக்கோப், அவர்களுடைய நம்பிக்கைகளையும் கனவுகளையும் கேட்டறிந்தார். போதைப் புழக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்த தடுத்து நிறுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

“இங்குள்ள பெண்களிடம் பேசியதில் இளம் வயதிலேயே அவர்களுக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டுள்ளது  தெரிய வந்தது. பெற்றோர், காதலர், சில சம்பவங்களில் கணவர்கூட அவர்கள் போதைப் பொருட்களை நாடுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். இதனால் பெண்களிடம் போதைப் புழக்கத்தை ஒழிக்க அதிக முயற்சிகள் தேவை,” என்று அதிபர் ஹலிமா யாக்கோப் சொன்னார்.

Loading...
Load next