சுடச் சுடச் செய்திகள்

கிளமெண்டி விபத்து; வேகமாக வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் பிணையில் விடுவிப்பு

கிளமெண்டி விபத்தில் என்யூஎஸ் மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதிவேகத்தில் வாகனத்தை செலுத்தியதாகக் கூறப்படும் ஓட்டுநருக்கு பிணை வழங்கப் பட்டுள்ளது. அவரை ஐயாயிரம் வெள்ளி பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அபாயகரமாக வாகனத்தை ஓட்டிய குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இங் லி நிங், 22, நேற்று நடைபெற்ற வழக்குக்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

சுமார் 92 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் வாகனத்தை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டில் நிகழ்ந்த சம்பவத்தில் அவரது கார், யாப் கோக் ஹுவா ஓட்டி வந்த டாக்சி மீது மோதியது.

இதில் டாக்கியில் பயணம் செய்த 19 வயது என்யூஎஸ் மாணவரான கெத்தி ஓங் காய் டிங் பலத்த காயங்களுடன் மரணமடைந்தார்.

அதே டாக்சியில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு மூளை பாதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் டாக்சி ஓட்டு நரான 55 வயது யாப்புக்கு கடந்த ஆகஸ்டு மாதம் எட்டு வாரச் சிறை தண்டனையும் ஐந்து ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.

கவனக்குறைவாக வாகனத்தை ஒட்டி என்யூஎஸ் மாணவர் ஓங்குக்கு மரணத்தையும்  மற்ற மூவருக்கு காயம் விளைவித்ததையும்  அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். என்யூஎஸ் மாணவரைத் தவிர மற்ற மூவருக்கும் வயது 22. சம்பவம் நடந்த அன்று காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டில் உள்ள கிளமெண்டி மாலில் யாப்பின் டாக்சியில் ஏறிய நால்வரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் உள்ள தெம்புசு கல்லூரிக்குச் சென்றனர்.

காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட், கிளமெண்டி ரோடு சந்திப்பை நோக்கிச் சென்ற யாப், சிவப்பு விளக்கு எரிந்ததும் டாக்சியை நிறுத்தினார்.

பச்சை விளக்கு போட்டதும் வலது பக்கமாகத் திரும்ப முன்னேறிச் சென்றார். எதிர்திசையில் வாகனங்கள் வருகிறதா என்பதையும் அவர் கவனித்தார்.

அப்போது எதிர்திசையில் அவரை நோக்கி இங்கின் வாகனம் அதிவேகத்தில் வந்தது.

ஆனால் அதற்குள் வலதுபக்கமாக திரும்பிவிடலாம் என்று முடிவு செய்த யாப் வாகனத்தைத் திருப்பினார். இதனால் யாப்பின் டாக்சி மீது இங்கின் வாகனம் மோதியது. டாக்சியில் பயணம் செய்த நால்வரும் படுகாயம் அடைந்த  னர். ஒருவர் மாண்டார்.