சுடச் சுடச் செய்திகள்

வனவிலங்குகள் சாலையைக் கடக்க நூதன முறை

ஓல்டு அப்பர் தாம்சன் ரோட்டின் ஒரு பக்கத்திலிருந்து குரங்குகள் சில ஒன்றன் பின் ஒன்றாக மறுபக்கத்திற்குக் கடந்து சென்று கொண்டிருந்ததை கேமரா ஒன்று கண்காணித்து வந்தது. 

அந்த விலங்குகள் செல்லும் அசைவை கேமரா உணர்ந்தபோது ‘விலங்குகள் முன்னே’ என்ற எச்சரிக்கை வாசகத்திற்குக் கீழ் உள்ள விளக்குகள் மின்னத் தொடங்கியது. மின்னுகிற அந்த அறிவிப்புப் பதாகையைக் கார் ஒன்று நெருங்கிக் கொண்டிருந்தபோது அதன் சிவப்பு நிற பிரேக் ஒளி மின்னத் தொடங்கியது. 

அப்போது அந்தக் கார் தனது வேகத்தைக் குறைத்து அந்தக் குரங்குகள் பாதுகாப்பாகக் கடந்து செல்வதற்கான நேரத்தைத் தந்தது.

இதனைச் சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பத்தின்மூலம் அதிகாரிகள் சிங்கப்பூரின் பூர்வீக வனவிலங்குகளைப் பாதுகாக்க முற்படுகின்றனர். தாம்சன் இயற்கைப் பூங்காவின் திறப்புவிழா

வின்போது, நூதனமான இந்த வனவிலங்கு கண்டுபிடிப்பு முறையை தேசிய பூங்காக் கழகம்  நேற்று வெளியிட்டது.  

தேசிய பூங்காக் கழகமும் நிலப் போக்குவரத்து ஆணையமும்  இந்தக் கட்டமைப்புக்காக $400,000 செலவு செய்தது. சாலைகளை மனிதர்கள் அல்லது விலங்குகள் கடந்து செல்கிறதா என்பதை அறியும் ‘அல்கோரிதம்’ எனப்படும் படிமுறைத்தீர்வை இந்தத் தொழில் நுட்பக் கட்டமைப்பு கொண்டுள்ளது.

உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க ஆணையம் ‘என் பார்க்ஸுடன்’ எப்போதும் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார் ஆணையத்தின் தலைமை நிர்வாகி நியன் ஹூன் பின்.