சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் பேரங்காடிகளில் உக்ரேன் நாட்டு முட்டைகள்

உக்ரேனில் உற்பத்தியாகும் முட்டைகள் (படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு) சிங்கப்பூர் பேரங்காடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. உணவுப் பொருள்களைப் பல்வேறு இடங்களிலிருந்து பெறுவதன் மூலம் சிங்கப்பூர் தனது உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்கிறது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து சுமார் 4.6 மில்லியன் முட்டைகள் உக்ரேனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூருக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கான அங்கீகாரம் உக்ரேனுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது. சிங்கப்பூருக்கு முட்டை ஏற்றுமதி செய்யும் ஆஸ்திரேலியா, டென்மார்க், மலேசியா உள்ளிட்ட 10 நாடுகளுடன் உக்ரேனும் இணைந்துள்ளது.

இவ்வாண்டு தொடக்கம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சிங்கப்பூரின் முட்டை தேவையில் 73%ஐ மலேசியா பூர்த்தி செய்தது. உள்ளூர் பண்ணைகள் 26% முட்டைகளை உற்பத்தி செய்தன. எஞ்சிய 1% முட்டைகள் மற்ற நாடுகளில் இருந்து பெறப்பட்டன. 

இந்த வட்டாரத்தில் பறவைக் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டாலும், வெகுதொலைவில் இருக்கும் உக்ரேனில் உற்பத்தியாகும் முட்டைகள் பாதிக்கப்படாது என்பதால் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.