ஏஎச்டிசி: முறைகேடாகப் பயன்படுத்திய நிதியை மீட்க நடவடிக்கை கோரும் வீவக

முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் நிதியை மீட்பதற்கான நடவடிக்கைகளை அந்த நகர மன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) குறிப்பிட்டுள்ளது.

பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு பிரித்தம் சிங், திருவாட்டி சில்வியா லிம், திரு லோ தியா கியாங் ஆகியோரின் நிர்வாகத்தில் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் (ஏஎச்டிசி) $33.7 மில்லியன் அளவுக்கு முறையற்ற கட்டணங்களைச் செலுத்தியதாகவும், அதனால் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இம்மூவரும் பொறுப்பு எனவும் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. 

அதனையடுத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்களின் பணம் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் முறைகேடாகப் பயன்படுத்திய தொகையை மீட்க ஏஎச்டிசி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தது. இதன் தொடர்பில் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கழகம் தெரிவித்தது.

பொங்கோல் ஈஸ்ட் குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பணத்தை மீட்க உரிய நடவடிக்கைகள் அடுத்த சுற்று விசாரணைகளின்போது மேற்கொள்ளப்படும் என்று பொங்கோல் ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் சோங் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கிடையே, நீதிமன்றம் வழங்கிய 338 பக்க தீர்ப்பை கவனமாக ஆராய்ந்து, தங்களது வழக்கறிஞர்களின் ஆலோசனையைக் கேட்ட பிறகே தங்களது அடுத்த நடவடிக்கையைப் பற்றி அறிவிக்கப்போவதாக திரு பிரித்தம் சிங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு அதிர்ச்சியளிக்கவில்லை

நமது செய்தியாளர்களிடம் பேசிய, ஏஎச்டிசியைச் சேர்ந்த சில குடியிருப்பாளர்கள், இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றும் இந்த வழக்கின் காரணமாக இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டனர்.

நகர மன்றத்துக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை எவ்வளவு என்பதை அடுத்த கட்ட விசாரணைகள் கண்டறியவுள்ள நிலையில், இழப்புத் தொகையை அவர்களால் செலுத்த முடியாமல் திவாலாகும் நிலை ஏற்பட்டால் இம்மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படவோ அல்லது எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு ஆளாகவோ நேரிடலாம்.

வாக்காளர்கள் முடிவுசெய்யலாம்

சிராங்கூனில் வசிக்கும் 34 வயது நிர்வாக உதவியாளார் திருவாட்டி ரசிதா சுரடி, “இது குற்றவியல் வழக்கு இல்லை. அவர்கள் குற்றம் புரியவில்லை. தவறிழைத்திருக்கின்றனர். அவர்கள் மீண்டும் இந்தத் தவறைச் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களுக்கு வாக்களிப்பது பற்றி வாக்காளர்கள் முடிவுசெய்யலாம்,” என்று குறிப்பிட்டார்.

தலை–வர்–க–ளாக இருப்–ப–வர்–கள் நம்–ப–கத்–தன்–மை–யு–டை–ய–வர்–க–ளாக இருப்–பது அவ–சி–யம் என்–றும் சிலர் கருத்–து–ரைத்–த–னர்.