மனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

மலாக்காவில் தனது மனைவியையும் மாற்றான் மகனையும் கொன்று அவர்களது உடல்களைக் கண்டதுண்டமாக வெட்டியதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவர் போலிசாரால் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
அந்த வீட்டின் கூரையின்மீது அவ்விருவரின் துண்டிக்கப்பட்ட தலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

கொல்லப்பட்ட 27 வயது பெண், அவரது 11 வயது மகன் ஆகியோரின் உடற்பாகங்களைப் புல் வெட்டுபவர் ஒருவர்  தொழிற்சாலை வட்டாரத்திற்கு அருகே கண்டுபிடித்ததாக ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. 
 

தலைகளும் கைகளும் தவிர இவர்களது உடற்பாகங்கள்,  நான்கைந்து நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். 
 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அரிவாளால் அவ்விருவரையும் வெட்டி அவர்களது உடற்பாகங்களை இரண்டு இடங்களில் வீசி எறிந்தார். 
 

அவர் சிங்கப்பூர் போலிசின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டதாக மலாக்காவின் போலிஸ் தலைவர் மாட் காசிம் கரிம் தெரிவித்தார்.
 

மலேசியாவிலுள்ள தஞ்சோங் மிஞ்யாக்கில் நிகழ்ந்த கொலை ஒன்றின் தொடர்பிலான விசாரணைக்கு  உதவுமாறு மலேசிய போலிசார் தங்களிடம் கேட்டதாக சிங்கப்பூர் போலிசார் தெரிவித்தன.
 

“31 வயது சந்தேக நபரைக் கைது செய்த சிங்கப்பூர் போலிசார், அக்டோபர் 11ஆம் தேதியன்று மலேசிய போலிசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை தொடர்ந்து நடப்பதால் இது குறித்து மேலும் கூறுவது ஏற்புடையதன்று,” என்று மலேசிய போலிசாரின் அறிக்கை குறிப்பிடுகிறது.
 

தாமான் மெர்டேக்கா ஜெயாவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அவரது இரண்டு மாடி வீட்டுக்கு போலிசார் சந்தேக நபரை அழைத்துச் சென்றனர்.  
 

வீட்டுக்கூரையில் உயிரிழந்த இருவரின் துண்டிக்கப்பட்ட தலைகளும் வீட்டின் படுக்கை அறையில் ரத்தக் கறையும் காணப்பட்டதாக சின் சியூ நாளிதழ் தெரிவித்தது. 
 

இந்தக் கொலைகளைச் செய்வதற்கு முன்னதாக சந்தேக நபர் தனது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. 
 

வாக்குவாதம் முற்றிப்போய் ஆத்திரத்தால் அறிவிழந்த அவர் தனது மனைவியைச் சமையலறைக் கத்தியால் குத்திக்கொன்ற பிறகு அரிவாளால் அவரது தலையை வெட்டியதாக மலேசிய நாளிதழான சைனா பிரஸ் தெரிவித்தது.
 

இந்தக் கொலைக்கு ஒரே சாட்சியாக இருந்த அந்தப் பெண்ணின் மகனையும் அந்த ஆடவர் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 
 

மாண்ட அவ்விருவரின் தலைகளையும் கரங்களையும் வெட்டி அந்த வீட்டுக்கு அருகிலுள்ள குப்பைத் தொட்டிக்குள் வீசியதாகவும் கூறப்படுகிறது. 
 

மற்ற உடற்பாகங்களை ஒவ்வொன்றாக வெட்டி பைகளுக்குள் வைத்து அவற்றை வீசி எறிவதற்குத் தனது காரில் எடுத்துச் சென்றார் அந்த ஆடவர். அந்தத் தாயாரின் ஆக இளைய பிள்ளையை சந்தேகநபர் தன்னுடன் அதே காரில் கூட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
 

ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட அந்த சந்தேகநபர், கொலை செய்யப்பட்ட இந்தப் பெண்ணை ஓராண்டுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டதாக சிங்கப்பூரின் ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. 
 

தோ பாயோ லோரோங் 7ல்  உள்ள ஒரு வாடகை வீட்டில் அவர்கள் வசித்ததாக அவர்களது அண்டை வீட்டார் ஷின் மின்னிடம் தெரிவித்தனர்.  
 

இறந்த பெண்ணின் முன்னைய திருமணத்திலிருந்து பிறந்த நான்கு பிள்ளைகளுடன் அந்தத் தம்பதியர் அவ்வீட்டில் ஒன்றாக வசித்து வந்த தாகக் கூறப்படுகிறது.
 

சந்தேக நபர் உணவு விநியோக நிறுவன ஊழியராகப் பணியாற்றிய தாக அண்டை வீட்டார் ஒருவர் கூறியதாக ஷின்மின் குறிப்பிட்டது.

Loading...
Load next