'நிம்மதியான பொற்காலத்தை மூத்தோர் அனுபவிப்பர்'

'நிம்மதியான பொற்காலத்தை மூத்தோர் அனுபவிப்பர்'

2 mins read
7557f922-0d8d-4b77-b21e-5ec883b4b267
-

காலஞ்சென்ற மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ, முன்னாள் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் 2011ஆம் ஆண்டில் தங்களது பதவிகளைவிட்டு விலகியபோது "இளைய தலைமுறையினர் எப்போதும் மூத்த தலைமுறையினரின் நலனைப் பற்றி யோசிக்கவேண்டும்," என்று தங்களுக்கு அடுத்து பதவியில் வந்தவர்களுக்கு நினைவுபடுத்தியதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார்.

இந்த வார்த்தைகள் தனக்குள் பதிந்திருப்பதாகவும் தமது வேலையில் தொடர்ந்து வழிகாட்டுவதாகவும் அதே 2011ஆம் ஆண்டில் அரசியலுக்கு அறிமுகமான திரு ஹெங் கூறுகிறார்.

முதியோருக்கான திட்டங்களை ஆதரிக்கும் மக்கள் செயல் கட்சியின் மூத்தோர் குழு (பிஏபி.எஸ்ஜி) ஏற்பாடு செய்திருந்த முதியோருக்கான அனைத்துலக தின நிகழ்ச்சியில் திரு ஹெங் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

சிங்கப்பூரர்களில் 15 விழுக்காட்டினர் (அதாவது 500,000 சிங்கப்பூரர்கள்) 65 வயதுக்கும் மேற்பட்ட வயதுடையவர்களாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் செயல் கட்சியின் முதலாம் உதவித் தலைமைச் செயலாளருமாக உள்ள திரு ஹெங்கின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

மூத்தோரின் பல்வேறு குறிக்கோள்களை ஆதரிக்க அரசாங்கம் விரும்புகிறது என்று குறிப்பிட்ட திரு ஹெங், அவர்களது தேவைகளை நிறைவு செய்ய தலைவர்கள் வெவ்வேறு கருத்துகளைக் கேட்டு கொள்கைகளை உரிய விதத்தில் மாற்றுவர் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, அவரும் அவரது சகாக்களும் 'பிஏபி.எஸ்ஜி'யின் பணிகளை உன்னிப்பாக கவனித்து வந்திருக்கின்றனர். அந்த அமைப்பு 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ஆறு மாதங்களாக நீடித்த ஆலோசனைக்குப் பிறகு இவ் வாண்டு ஜனவரி மாதத்தில் கொள்கைகள் தொடர்பான பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றிலுள்ள பல்வேறு பரிந்துரைகள் அரசின் கொள்கைகளாக மாறியுள்ளன என்று திரு ஹெங் கூறினார்.

உதாரணத்திற்கு, 55 வயதைத் தாண்டிய ஊழியர்களின் மத்திய சேமநிதிப் பங்களிப்பு விகிதங்களை உயர்த்தும் யோசனை இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையின்போது அறிவிப்பாக வெளிவந்தது.

சிங்கப்பூரின் நான்காவது தலைமுறையினர் மேம்படவும் கொள்கைகளை மேலும் சிறப்பாக எடுத்துரைக்கவும் இந்தக் குழுவால் திரட்டப்படும் கருத்துகள் பெரிதும் கைகொடுக்கும் என்று திரு ஹெங் தெரிவித்தார்.

மக்களுடன் தொடர்ந்து அணுக்கமாக இணைந்திருக்கவும் அவர் அந்தக் குழுவை ஊக்குவித்தார்.

ஹோட்டல் மிராமர் சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 420 விருந்தினர் பங்கேற்றனர். "மக்களுடன் அணுக்கமாகச் செயல்படும் இந்த அணுகுமுறை மக்கள் செயல் கட்சி ஆர்வலர்களிடைய தலைமுறை தலைமுறையாகத் தழைக்கவேண்டும்," என்று திரு ஹெங் தெரிவித்தார்.

முதியவர்கள் தங்கள் வயதான காலத்தில் நிம்மதியுடன் இருக்கவும் வேண்டிய பராமரிப்பைப் பெறவும் அரசாங்கம் தன் பங்கைத் தொடர்ந்து ஆற்றும் என்றும் அவர் கூறினார்.

மூத்தோருக்காகக் குரல்கொடுத்து அவர்களது ஈடுபாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்துவதன் மூலம் மசெக மூத்தோர் குழு பங்காற்றலாம் என்றார் துணைப் பிரதமர் ஹெங்.