பரவலாக எதிர்பார்க்கப்பட்டதுபோல சிங்கப்பூர் நாணய ஆணையம், இந்நாட்டின் நாணய மதிப்பின் உயர்வைக் குறைத்துள்ளது. மெதுவடையும் பொருளியலின் காரணமாக சிங்கப்பூரின் மத்திய வங்கியான நாணய ஆணையம் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதனை அனுமதித்துள்ளது
2018ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வெள்ளிக்கான தேவையைக் குறைப்பதற்காக இரண்டு முறை நடவடிக்கை எடுத்ததை அடுத்து, இப்போது இந்தப் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
திங்கட்கிழமை அன்று தனது பணவியல் கொள்கை மறுஆய்வின்போது, கொள்கை ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட நாணய மதிப்பு வரையறைகள் சற்று குறைக்கப்படும் என்று நாணய ஆணையம் தெரிவித்தது. இந்த மறுஆய்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.
குறிப்பிட்ட சில முக்கிய நாணயங்களின் மதிப்புடன் ஒப்புநோக்க சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு ஆண்டுக்கு 0.5 விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கலாம் என்று டிபிஎஸ் நாணய மாற்றத்திற்கான உத்திபூர்வ நிபுணர் பிலிப் வீ தெரிவித்தார். இந்த விழுக்காடு முன்னதாக ஒரு விழுக்காடாக இருந்தது.
வெள்ளியின் மதிப்பு குறைவதால் சிங்கப்பூரில் இறக்குமதிகளின் விலை உயரும். அதே நேரத்தில் சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் வர்த்தக பொருட்களுக்கும் சேவைகளுக்குமான வெளிநாட்டுத் தேவையைக் கூட்டும்.

