இயோ சூ காங் விபத்தில் மூவர் பலி; குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்

இயோ சூ காங் விபத்தில் மூவர் பலி; குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்

2 mins read
48c4a9a8-0e68-4bd5-8c88-192f85f93c5e
-

இயோ சூ காங் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே மூன்று பாதசாரிகளை மோதிக் கொன்ற லாரி ஓட்டுநர், பிரிவு 3 உரிமமும் காப்புறுதியும் இன்றி லாரியை ஓட்டிய குற்றத்தை நீதிமன்றத்தில் இன்று ஒப்புக்கொண்டார்.

இந்தச் செயலுக்காக 27 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி சூ காய் சியாங்கிற்கு 1,400 வெள்ளி அபராதமும் வாகனம் ஓட்டுவதற்கான ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மூன்று பேரைக் கொன்றதற்கான மூன்றாவது குற்றச்சாட்டையும் அவர் ஆரம்பத்தில் எதிர்நோக்கியிருந்தார். ஆயினும், மரண விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவு வெளிவரும் வரை, அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவருக்கு நிபந்தனையின்பேரிலான விடுவிப்பு அளிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த நேரத்தில் சூ தனது தந்தையின் கட்டுமான நிறுவனமான சாங் ஃபூ பிரைவெட் லிமிடெட்டில் பாதுகாப்பு மேலாளராகப் பணியாற்றினார். அப்போது அவர் பொட்டலம் ஒன்றைப் பொற்றுக்கொள்ள அந்த நிறுவனத்தின் லாரியை ஓட்டினார்.

காலை 9.30 மணி அளவில் சூ, அங் மோ கியோ அவென்யூ 6ல் ஓட்டிக்கொண்டிருந்தார். வழியில் அந்த லாரியின் மீதான கட்டுப்பாட்டை சூ இழக்க, அந்த லாரி மூன்று பாதசாரிகளை இடித்து சம்பவ இடத்திலேயே அவர்களைப் பலிவாங்கியது. விபத்தில் காயமடைந்த சூவிடம் பிரிவு 3ஏ உரிமம் இருந்தது. ஆனால் லாரியை ஓட்டுவதற்குத் தேவைப்படும் பிரிவு 3 உரிமம் அவரிடம் இல்லை. சூவிடம் பிரிவு 3 உரிமம் இருப்பதாக நம்பி லாரியை ஓட்டுவதற்கு அவரது தந்தை அவருக்கு அனுமதி தந்திருந்தார்.

தகுந்த உரிமமும் காப்புறுதியும் இன்றி ஓட்டியதற்காக அவருக்கு 1,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.