ஒரு வெள்ளி கட்டணத்தில் பொம்மைகளை வழங்கும் விளையாட்டு இயந்திரத்தில் ஒரு பொம்மையைப் பெற நினைத்த ஒரு பெண் அந்த இயந்திரத்தைப் பலமாக உலுக்கினார். அவ்வாறு உலுக்கியதில் ஒரு கரடி பொம்மை இயந்திரத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள துவாரம் வழியாக வெளிவந்தது.
ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள லக்கி பிளாஸாவிலுள்ள கீழ்த்தளம் ஒன்றில் இருக்கும் 'பேர் கிளோ தைவான்' விளையாட்டுக்கூடத்தின் கண்காணிப்புக் கேமராவில் இந்தச் சம்பவம் பதிவானது. அந்த விளையாட்டுக்கூடத்தின் உரிமையாளர், சம்பவத்தைக் காட்டும் காணொளியை ஸ்டோம்ப் இணைய செய்தித்தளத்திற்கு அனுப்பினார்.
பொம்மையை எடுத்த பிறகே சம்பந்தப்பட்ட பெண், இயந்திரத்திற்குள் ஒரு வெள்ளியைப் போட்டதை அந்தக் காணொளி காட்டுகிறது.
சம்பந்தப்பட்ட பெண்ணைத் தேடிப்பிடிப்பதற்காக இந்தக் காணொளியைப் பகிரவில்லை என்று பெயர் வெளியிடப்படாத அந்த விளையாட்டுக்கூடஉரிமையாளர் தெரிவித்தார்.
ஆயினும், இத்தகைய செயல்களைச் செய்வதால் ஏற்படக்கூடிய கடுமையான பின்விளைவுகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் தாம் காணொளியைப் பகிர்ந்ததாக அவர் கூறினார். மிகவும் கனமான அந்த இயந்திரம் எவர் மீதாவது விழுந்தால் அது அசம்பாவிதத்தில் முடியும் என்றும் அவர் கூறினார்.
"விளையாட்டு இயந்திரத்தின் 'இரும்புக் கை'யில் சிக்கிய பொம்மைகளை விரும்பிய வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் அவற்றை மனமுவந்து கொடுத்திருக்கிறோம். அந்த இயந்திரத்தை இவ்வாறு குலுக்குவதற்கான அவசியமே இல்லை," என்றார் அந்த விளையாட்டுக்கூட உரிமையாளர்.

