மானபங்கம்; இரு முதியோர் உட்பட ஏழு பேர் மீது குற்றச்சாட்டு

மானபங்கம்; இரு முதியோர் உட்பட ஏழு பேர் மீது குற்றச்சாட்டு

2 mins read
9223bc97-9dba-4568-b3bd-e876933cfc5d
-

இரு முதியோர் உட்பட ஏழு பேர் மீது நேற்று மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 73 வயதான லிம் ஹா பா என்பவர் மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இரு மானபங்கக் குற்றச்சாட்டுகளும் ெபண்ணின் தன்மானத்துக்கு இழிவு ஏற்படுத்திய 3வது குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர் மீதான அனைத்து குற்றச்செயல்களும் 40 வயது பெண் ஒருவர் தொடர்பானது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தஞ்சோங் பகாரில் உள்ள '100 ஏஎம்' மாலில் உள்ள ஸின் ஹுவா டிசிஎம் மருந்தகத்தில் லிம் குற்றச்செயல்களை புரிந்ததாகக் கூறப்பட்டது. அப்போது அவர் அங்கு வேலை பார்த்தாரா என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் 40 வயது பெண்ணின் அந்தரங்க இடங்களை லிம் தொட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண்ணின் மார்பகத்தைத் தொட்டு அவரது பாலியல் வாழ்க்கை குறித்து லிம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு சம்பவத்தில் 75 வயது யான் கோக் ஃபாட் மீது மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவ்வாண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் மிட்பாயிண்ட் ஆர்ச்சர்ட் கடைத் தொகுதியில் 21 வயது பெண்ணை அவர் மானபங்கப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெண்ணின் மார்பகத்தையும் அவரது வயிற்றுப் பகுதியையும் யான் கோக் ஃபாட் தொட்டுவிட்டாராம். லோ வாய் சியாங், வயது 26, முஹமட் சாலிஹின் ஒமர், வயது 31, இங் சூன் ஹீ, வயது 47, ஹாஜி முஹமட் யூசோப், வயது 54, ஆகியோர் மானபங்கக் குற்றச்சாட்டு களை எதிர்நோக்கும் இதர நால்வர்.

சிங்கப்பூரரான ஐந்தாவது நபர், மார்ச் மாதத்தில் மூன்று வெவ்வேறு சமயங்களில் பணிப்பெண்ணை மானபங்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் பணிப்பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்பதால் 48 சிங்கப்பூரரின் பெயர் வெளியிடப்படவில்லை.

சிராங்கூன் அவென்யூ 2ல் உள்ள வீட்டில் பணிப் பெண்ணின் மார்பகத்தைத் தொட்டது உட்பட பலமுறை அவர் மானபங்கப்படுத்தியாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பெண்ணுக்கு மானபங்கத்தை ஏற்படுத்தும் செயல்கள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளதாகவும் இது முக்கிய கவலைக்குரிய அம்சமாக இருப்பதாகவும் போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

மானபங்கக் குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம். ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு அவர்களுடைய வயது காரணமாக பிரம்படித் தண்டனை விதிக்கப்படுவதில்லை.