இவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கும் முதல் கடப்பிதழ் இலவசம்

1 mins read
7b855191-f8d6-4dbb-9373-1da6a1420404
சிங்கப்பூரர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. படம்: கோப்புப்படம் -

அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து பிறக்கும் சிங்கப்பூர் குடியுரிமையுள்ள குழந்தைகள், தங்களது முதல் கடப்பிதழுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்கம் அறிவித்தது. சிங்கப்பூரர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.

இந்தக் கட்டணச் சலுகை இவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) அறிவித்தது. இந்தக் குழந்தைகள் தங்களது முதல் பிறந்தநாளுக்குள் இணையம்வழி கடப்பிதழுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.

குழந்தையின் பிறப்புச் சான்றிதழை மருத்துவமனையிலிருந்து அல்லது ஆணையத்தின் கட்டடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களிடம் புதிய மாற்றம் தெரியப்படுத்தப்படும் என ஆணையம் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், தகுதிபெறும் குழந்தையின் பெற்றோர்களுக்கு "MyICA" இணையவாசலின் வழியாகக் கட்டணச்சலுகை பற்றி மின்தகவல் அனுப்பப்படும். அந்தத் தகவலை 'கிளிக்' செய்வதன்வழி, பெற்றோர்கள் விண்ணப்பக் கட்டணமின்றி குழந்தைக்குக் கடப்பிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

அதோடு ஜனவரி 1 முதல், ஆறு வயதுக்குக் குறைவான பிள்ளைகள் தங்களது கடப்பிதழைப் பெற்றுக்கொள்ள நேரில் வரவேண்டியதில்லை என்றும் ஆணையம் அறிவித்தது. ஆறு வயதுக்கு மேலான பிள்ளைகள் கடப்பிதழ்களைப் பெற்றுக்கொள்ள நேரில் வந்தாகவேண்டும். அவர்களது கருவிழியும் கைரேகையும் பதிவு செய்யப்படும். அதன்பிறகு அவர்கள் சோதனைச்சாவடிகளில் தானியக்க நுழைவுத் தடங்களைப் பயன்படுத்தலாம் என ஆணையம் தெரிவித்தது.