செயலிமூலம் ஆபாசத் தகவல்களைப் பகிர்ந்த நால்வரில் இருவர் பதின்ம வயதினர்

ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் ‘டெலிகிராம்’ செயலிமூலம் பகிர்ந்துகொண்ட நால்வர் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். ‘எஸ்ஜி நாசி லெமாக்’ என்ற பெயரிலான உரையாடல் குழுவில் உறுப்பினர்களாக இருந்த அந்த நால்வரில் இருவர் பதின்ம வயதினர்.

கைதானவர்களின் பெயர்கள்  அப்டில்லா சபருதீன் (17), ஜஸ்டின் லீ ஹன் ஷி (19) லெனர்ட் டியோ மின் சுவன் (26) மற்றும் லியொங் டின்வெய் (37) என நேற்று வெளியிடப்பட்டிருந்தன. இந்த நால்வரும் காணொளிக் கருத்தரங்கு மூலம் நீதிமன்றத்தில்  இன்று முன்னிலையாகினர்.

ஆபாசக் காணொளிகளையும் காட்சிகளையும் பகிர்ந்துகொண்டதன் தொடர்பில் அந்த உரையாடல் குழுவுக்கு எதிராக இவ்வாண்டு மார்ச் 15க்கும் அக்டோபர் 3க்கும் இடைப்பட்ட காலத்தில் புகார்கள் செய்யப்பட்டன. இதை அடுத்து போலிசார் தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்த நான்கு சந்தேக நபர்களையும் நேற்று கைது செய்தனர்.

உரையாடல் குழுவை நிர்வகித்து வந்தவர்கள் டியோ மற்றும் லியொங் என்றும் அக்குழுவில் அப்டில்லா, லீ ஆகியோர் ஆபாசத் தகவல்களைப் பகிர்ந்து வந்தனர் என்றும் போலிசார் தெரிவித்தனர்.

அங் மோ கியோ போலிஸ் பிரிவின் அதிகாரிகள் இந்த நால்வரின் அடையாளங்களையும் உறுதி செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். 

ஒரு மடிக்கணினி, பல கைபேசிகள் உட்பட 10க்கும் மேற்பட்ட மின்சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. 

கிட்டத்தட்ட 44,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அந்த உரையாடல் குழு, தற்போது கலைக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் குழுவில் சேர்வதற்காக உறுப்பினர்கள் $30 கட்டணம் செலுத்தினர் என்றும் கூறப்பட்டது.

ஆபாசப் படங்களையும் பெண்களின் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட காணொளிகளையும்   பகிர்ந்துகொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. 

இம்மாதம் 22ஆம் தேதியன்று நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால்  மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.