சுடச் சுடச் செய்திகள்

கிளமென்டி கட்டடக் கீழ்த்தளத்தில் படுத்துறங்கிய ஆடவருக்கு அமைச்சு உதவி

கிளமென்டி அவென்யூ 5ல் அடுக்குமாடிக் கட்டடம் 327ன் கீழ்த்தளத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஒரு மெத்தையில் தூங்கிக்கொண்டிருந்த ஆடவருக்குத் தேவையான உதவி வழங்கப்பட்டு வருவதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஸ்டாம்ப் செய்தித்தளத்திடம் தெரிவித்தது. 

ஸ்டாம்ப் வாசகரான “எம்” என்பவர், தனது தாயை அந்தக் கட்டடத்திலுள்ள மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றபோது, ஆடவர் பொது இடத்தில் படுத்துத் தூங்குவதைக் கண்டு ஸ்டாம்ப் செய்தித்தளத்திற்குத் தகவலளித்தார். 

“நான் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 11 மணியளவில் என் தாயை மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன். அன்றுதான் முதல்முறையாக அந்த ஆடவரை அங்கு கண்டேன். பொறுப்பமைப்புகள் அவரது நிலையை ஆராயவேண்டும்,” என்றார் அவர். 

ஆடவர் படுத்திறங்கிய மெத்தையை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டதாக ஜூரோங்-கிளமென்டி நகர மன்றத்தின் பேச்சாளர் அக்டோபர் 4ஆம் தேதி ஸ்டாம்ப்பிடம் தெரிவித்தார். அதன்பிறகு ஆடவர் அங்கு தூங்கவில்லை என அவர் தெரிவித்தார். 

இதற்கிடையே, இந்நிலைமை பற்றி ஸ்டாம்ப் எழுப்பிய கேள்விக்குச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 16) பதிலளித்தது. ஆடவரின் நிலைமை பற்றி தகவலளித்த ஸ்டாம்ப் வாசகருக்கு நன்றி கூறிய அமைச்சின் பேச்சாளர், அந்த ஆடவரைப் பற்றி அமைச்சின் சமூகச் சேவை அலுவலகத்திற்கும் கிளமென்டி, ரோட்டரி குடும்பச் சேவை நிலையத்திற்கும் தெரியும் எனக் கூறினார். 

அவருக்கு 2019 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை காம்கேர் நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த உதவியை நீட்டிக்க அவர் செய்திருந்த விண்ணப்பத்தைச் சமூகச் சேவை அலுவலகம் பரிசீலித்து வருவதாகவும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.  அவருக்கு மாற்று இருப்பிடம் ஏற்பாடு செய்துகொடுக்க ரோட்டரி குடும்பச் சேவை நிலையத்திற்கு அலுவலகம் அவரை அனுப்பி வைத்தது. ஆனால், வழங்கப்பட்ட இருப்பிடங்களை ஆடவர் நிராகரித்துவிட்டதாகவும், நண்பருடன் தங்கியிருக்கப் போவதாகத் தெரிவித்ததாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார். அலுவலகமும் குடும்பச் சேவை நிலையமும் அவருக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்றார் அவர். 

ஆதரவு தேவைப்படும் தனிமனிதர்களை அல்லது குடும்பங்களைக் காண நேரிட்டால், 1800-222-0000 என்ற காம்கேர் நேரடித் தொலைபேசி வழியாகத் தகவல் அளிக்கலாம் அல்லது ஆக அருகிலுள் சமூகச் சேவை அலுவலகத்திற்கோ குடும்பச் சேவை நிலையத்திற்கோ செல்லலாம் என அமைச்சு தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon