எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவை 825ல் சக்கர நாற்காலி வசதி

எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவை 825ல் சக்கர நாற்காலி வசதி

1 mins read
f23bacf2-3ea8-4bf0-9cff-975df138a82e
-

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் இன்னும் எளிதான முறையில் பேருந்தில் ஏற முடியும்.

இயோ சூ காங் பேருந்து நிலையத்திற்கும் லெண்டோர் பகுதிக்கும் இடையே பேருந்துச் சேவை வழங்கும் எஸ்எம்ஆர்டி 825-ல், சக்கர நாற்காலியைத் தூக்கிவிடும் தானியக்க இயந்திர முறை பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திர முறையைச் செயல்படுத்துவதற்கு ஏறக்குறைய மூன்று நிமிடங்கள் எடுக்கும்.

முன்னதாக, சக்கர நாற்காலியில் செல்வோர் இப்பேருந்துச் சேவையைப் பயன்படுத்த முடியாது. எலெக்ட்ரிக் ரக சிறிய பேருந்தான இதன் நீளம் எட்டு மீட்டர்.

இந்த மாற்றத்தின் மூலம், சிங்கப்பூரில் இயக்கப்படும் சுமார் 5,800 பேருந்துகளில் 99 விழுக்காடு, சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதற்கு உகந்தவை என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சக்கர நாற்காலிகளைப் பேருந்துகளில் ஏற்றக்கூடிய தானியக்க இயந்திர முறை பொருத்தப்பட்ட சேவை எண் 825-ன் நான்கு சிறிய எலெக்ட்ரிக் பேருந்துகள் நேற்று தொடங்கி கட்டங்கட்டமாக அறிமுகம் காணும்.

இதற்கிடையே, 2017ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து இயோ சூ காங் பேருந்து நிலையத்தில் பெரிய அளவிலான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுப் போக்குவரத்து முறையைப் பசுமைமிக்கதாகவும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகவும் ஆக்குவதே மேம்பாட்டுப் பணிகளின் நோக்கம்.