3,000 கள்ள சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் பறிமுதல்

3,000 கள்ள சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் பறிமுதல்

1 mins read
96a0668e-bbb8-4406-b0f8-d33b454ea195
சிங்கப்பூருக்குள் நுழைய முற்பட்ட இரு வாகனங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கள்ள சிகரெட்டுகள். படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் -

துவாஸ் சோதனைச்சாவடியில் கடந்த சனிக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடையே 3,000க்கும் அதிகமான கள்ள சிகரெட்டு அட்டைப்பெட்டிகளைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சிகரெட்டுகளுக்காக மொத்தம் $310,000க்கும் அதிகமான பொருள், சேவை வரி செலுத்தப்படவில்லை. இந்த சிகரெட்டுகள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட பேருந்து மற்றும் கனரக வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டதாக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. இரு வாகனங்களும் வெவ்வேறு தினங்களில் சிங்கப்பூருக்குள் நுழைய முற்பட்டன.

இரு சம்பவங்களின்போதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழ, அந்த வாகனங்களைக் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தினர். கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணியளவில் நடந்த முதல் சம்பவத்தில், பேருந்தின் கீழ்ப்பகுதியில் 925 கள்ள சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டன.

அந்தப் பேருந்தை 28 வயது மலேசிய ஆடவர் ஒருவர் ஓட்டினார். அந்தப் பேருந்தில் பயணிகள் சிலர் இருந்தனர். கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இரண்டாவது சம்பவம் நடந்தது.

அப்போது, கனரக வாகனம் ஒன்றின் கொள்கலனின் மேற்கூரையில் 2,278 கள்ள சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனத்தை 29 வயது மலேசிய ஆடவர் ஒருவர் ஓட்டினார்.

இவ்விரு சம்பவங்களின் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்கள், கூடுதல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். நீதிமன்றத்திலும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.