சுடச் சுடச் செய்திகள்

39 ஆண்டுகளாகத் தவறான கல்லறைக்கு மரியாதை செலுத்திவந்த 8 குடும்பங்கள்

திரு மார்ன் சுவான் லீ 39 ஆண்டுகளாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது பாட்டியின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்திவந்தார். கல்லறையைச் சுத்தப்படுத்தி, கல்லறைக்கல்லுக்குப் பக்கத்தில் தோட்ட விளக்குகளையும் பொருத்தினார். 

ஆனால், சுவா சூ காங் சீன இடுகாட்டில் இருந்த அந்தக் கல்லறை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தோண்டி எடுக்கப்பட்டபோது, அதிலிருந்த பஞ்சு பொம்மைகள், வண்ணப் பென்சில்கள், சங்கிலி ஆகியவற்றைக் கண்டு அது தனது பாட்டியுடைய கல்லறை அல்ல என்பதை அறிந்து திடுக்கிட்டார். 

“எனக்குப் பைத்தியம் பிடிப்பது போலாகிவிட்டது. யாரோ ஒருவர் அவரைக் கடத்திச் சென்றுவிட்டதுபோலவும், அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாதது போலவும் தோன்றியது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அவர் கூறினார். 

இதுபற்றி தேசிய சுற்றுப்புற வாரியத்திடம் 50 வயது திரு மார்ன் தெரியப்படுத்தினார். அவரது பாட்டியுடைய கல்லறை என அவர் நம்பியிருந்த கல்லறைக்குப் பக்கத்திலிருந்த இரு கல்லறைகளை வாரியம் அக்டோபர் 2ஆம் தேதி தோண்டியெடுத்தது.   அவற்றை ஆராய்ந்தபோது, ஒரு கல்லறையின் கல்லறைக்கல் வரிசையாக இல்லாததால் பக்கத்திலிருந்த கல்லறைக்கற்களும் தவறான கல்லறைகளுடன் இணைக்கப்பட்டதாக வாரியம் கண்டறிந்தது. 

ஆனால், பக்கத்திலிருந்த கல்லறைகளில் ஆண்களின் துணிகள் இருந்தன. வாரியம் மேலும் ஐந்து கல்லறைகளைத் தோண்டிய பிறகே அக்டோபர் 11ஆம் தேதி தனது பாட்டியின் பிரேதச் சிதைவைத் திரு மார்ன் முடிவில் கண்டுபிடித்தார். 

இந்தக் கல்லறைகள் அனைத்தும் 39 ஆண்டுகளுக்குமுன் ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டதாக வாரியப் பேச்சாளர் புதன்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்தார். 

“அடக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உறவினர் கல்லறைக்கல் நிறுவவில்லை, அதோடு ஒரு கல்லறைக்கல் இரு சவக்குழிகளின் இடத்தில் நிறுவப்பட்டிருந்ததால் வரிசை மாறிப்போனது,” என வாரியம் தெரிவித்தது. 

இதனால் மொத்தம் ஒன்பது கல்லறைகள் பாதிக்கப்பட்டன. 

பாதிக்கப்பட்ட மீதி குடும்பங்களுடன் சரியான பிரேதச் சிதைவுகள் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக வாரியப் பேச்சாளர் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கும் வாரியம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. 

சுவா சூ காங் இடுகாட்டில் இவ்வாண்டு செப்டம்பர் 30 வரை தோண்டி எடுக்கப்பட்ட 16,800 கல்றைகளில் இத்தகைய சம்பவம் நேர்ந்திருப்பது இதுவே முதல் முறை. 

திரு மார்ன் தனது பாட்டியின் பிரேதச்சிதைவுகளை எரியூட்டிவிட்டார். ஆனால், மறுபடியும் ஏதாவது குழப்பம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அவரது அஸ்தியைச் சுடுகாட்டில் பத்திரப்படுத்தி வைக்கவில்லை என்று அவர் கூறினார். 

சிறு வயதில் அவரையும் அவரது ஆறு உடன்பிறப்புகளையும் கவனித்துக்கொண்ட பாட்டியுடன் திரு மார்ன் நெருக்கமாக இருந்தார். அவரது 12வது வயதில் பாட்டி காலமாகிவிட்டார். 

இப்போது, சீனக் கோயிலில் அஸ்தியைப் பத்திரப்படுத்தி வைப்பதற்காகக் காத்திருக்கையில், தனது வீட்டில் அஸ்தியை வைத்திருக்கிறார். 

“என் பாட்டி இப்போதுதான் திரும்பக் கிடைத்தார், அவரை மறுபடியும் இழந்துவிடுவேனோ என பயமாக இருக்கிறது,” என்றார் திரு மார்ன். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon