சுடச் சுடச் செய்திகள்

அனைத்துலகப் பொருளியலுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக தலைமைத்துவ விருது

உலக நிதி ஆளுமைக்கும் பொதுச் சேவைத்துறைக்கும் ஆற்றிய பங்கிற்காக, மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்திற்கு வியாழக்கிழமை (அக்டோபர் 17) உயரிய தலைமைத்துவ விருது அளிக்கப்பட்டது. 

அனைத்துலக நிதிக் கழகம் அவருக்கு ‘சிறப்பு தலைமைத்துவச் சேவை விருதை’ வழங்கி கௌரவித்தது. இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் மார்க் கார்னிக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. 

தங்களது தலைமைத்துவத்தின் மூலம் உலகளாவிய பொருளியலுக்கும் நிதிநிலைக்கும் சிறப்பான முறையில் நீடித்த பங்காற்றியவர்களை இவ்விருது அங்கீகரிப்பதாக அனைத்துலக நிதிக் கழகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. 

இந்த நிதித் தொழில்துறை கழகம் வாஷிங்டன் டிசி-யில் தளம் கொண்டுள்ளது. வர்த்தக மற்றும் முதலீட்டு வங்கிகள், அரசு நிதிகள், மத்திய வங்கிகள், வளர்ச்சி வங்கிகள் உட்பட 70க்கும் மேலான நாடுகளின் 450க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இக்கழகத்தில் அங்கம் வகிக்கின்றனர். 

வாஷிங்டனில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தின்போது, கழகத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான திமத்தி ஆடம்ஸ் திரு தர்மனுக்கு விருதை வழங்கினார். 

“நீங்கள் ஒரு தொலைநோக்காளர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இடர்களைக் களைந்து நிதித்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கவும், அதிக மீள்திறன்மிக்க மூலதனப் புழக்கத்தை அடையவும் உலகளாவிய சீர்திருத்தங்களை முன்மொழியும் முன்னணித் திறனாளராக நீங்கள் அங்கீகரிக்கப்படவேண்டும்,” என்று திரு தர்மனைப் பற்றி திரு ஆடம்ஸ் கூறினார். 

உலக வங்கி, அனைத்துலக பண நிதியம் ஆகியவற்றின் வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) வரை அமெரிக்காவில் இருக்கும் திரு தர்மன், இந்த விருதைப் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூர் அரசாங்கம் ஆகியவற்றில் தம்முடன் பணியாற்றியவர்கள், மீள்திறன்மிக்க வளர்ச்சியடையும் நிதிச் சந்தைகளை உருவாக்குவதில் தம்முடன் பணியாற்றியவர்கள் ஆகியோருக்கும் இந்தப் பெருமை சேரும் என்றார் திரு தர்மன் சண்முகரத்னம்.