கொலைக் குற்றச்சாட்டு, தாக்குதல் குற்றச்சாட்டாக குறைக்கப்பட்டது; ஆனந்தக் கண்ணீரில் சியாவ்

கொலைக் குற்றச்சாட்டு, தாக்குதல் குற்றச்சாட்டாக குறைக்கப்பட்டது; ஆனந்தக் கண்ணீரில் சியாவ்

2 mins read
ad1d9b6d-4ea0-45b2-8ffc-820ff00ab82d
தன்மீது இருந்த கொலைக் குற்றச்சாட்டு, தாக்குதல் குற்றச்சாட்டாக குறைக்கப்பட்டதைக் கேட்டதும் நெட்டலி சியாவ் யு ஸென், ஆனந்தக் கண்ணீர்விட்டு அழுததாக அவரது வழக்கறிஞர்  கூறினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தன்மீது இருந்த கொலைக் குற்றச்சாட்டு, தாக்குதல் குற்றச்சாட்டாக குறைக்கப்பட்டதைக் கேட்டதும் நெட்டலி சியாவ் யு ஸென், 23, ஆனந்தக் கண்ணீர்விட்டு அழுததாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

இவ்வாண்டு ஜூலை 2ஆம் தேதி ஆர்ச்சர்ட் டவர்ஸில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 31 வயது சத்திஷ் நோவல் கோபிதாஸ் உயிரிழந்தார்.

அவரைத் தாக்கிய எழுவர் கொண்ட கும்பலில் சியாவ் மட்டுமே பெண்.

காலை சுமார் 6.30 மணிக்கு நடந்த தாக்குதல் சம்பவத்தில் சியாவ்வுடன் மேலும் மூன்று ஆண்கள் சேர்ந்து சத்தீஷைக் குத்தியதாகவும் உதைத்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரை சிறைத் தண்டனையும் $5000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆனால் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

தாக்குதலை அடுத்து டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சத்தீஷ், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உயிரிழந்தார்.

நீதிமன்ற விசாரணையை அடுத்து, அரசுதரப்பு வழக்கறிஞர்கள் சியாவ் மீது இருந்த கொலை குற்றச்சாட்டைத் தாக்குதல் குற்றச்சாட்டாகக் குறைக்க ஒப்புக்கொண்டதைக் கேட்டு சியாவ் அழுததாகவும் அரசு தரப்பு தம் வேண்டுகோளுக்கு இணங்கியதற்குத் தாம் நன்றியுடன் இருப்பதாகவும் சியாவின் வழக்கறிஞர் கில் கூறினார்.

வீட்டுக்குச் சென்று தன் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க விரும்பிய சியாவ், இவ்வழக்க்கின் தொடர்பில் முழு ஒத்துழைப்பையும் வழங்குவார் என்றும் திரு கில் உறுதி அளித்தார். $15000 பிணையில் இன்று விடுவிக்கப்பட்ட சியாவ், இம்மாதம் 25ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவார்.