'நுண்ணறிவுத் திறனைக் கொண்டு பாலர் பள்ளியில் அனுமதிப்பது பொருத்தமற்றது'

'நுண்ணறிவுத் திறனைக் கொண்டு பாலர் பள்ளியில் அனுமதிப்பது பொருத்தமற்றது'

1 mins read
5279cb42-3e6c-4595-89b2-6d3d71eca382
பிள்ளைப் பருவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் வகையில் பாலர் பள்ளிகள் அமையவேண்டும். படம்: அமைச்சர் இந்திராணி ஃபேஸ்புக் -

நுண்ணறிவுத் திறன் சோதனையில் பெறப்படும் மதிப்பெண்ணைக் கொண்டு பாலர் பள்ளியில் சேர்க்கும் வழக்கத்தை இரு அமைச்சர்கள் வெகுவாகச் சாடியுள்ளனர். பிள்ளைகளின் தொடக்க ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சி இலக்காக இருக்க வேண்டுமே தவிர வெறும் நுண்ணறிவு மதிப்பளவைக் கொண்டு பாலர் பள்ளியில் அனுமதிப்பது பொருத்தமற்ற ஒரு வழக்கம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜாவும் கூறியுள்ளனர்.

நுண்ணறிவுத் திறன் சோதனையில் அதிக மதிப்பெண் பெறும் சிறார்களே ஒரு சில பாலர் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப் படுகின்றனர் என்ற செய்தி அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்ததை அடுத்து இரு அமைச்சர்களும் தங்களின் தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கங்களில் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தனர்.

சிறுவர்களின் சராசரி நுண்ணறிவு மதிப்பளவு கிட்டத்தட்ட 100 என்ற நிலையில் குறிப்பிட்ட சில பாலர் பள்ளிகள், 120க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெறும் சிறார்களையே ஏற்றுக்கொள்வதாகக் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் பலதரப்பட்ட திறன்களுடைய சிறார்களுடன் பழகவும் கலந்துறவாடவும் வாய்ப்பளிக்கும் வகையில் பாலர் பள்ளிகள் அமைய வேண்டும் என்றும் சிறார்கள் தங்களின் பிள்ளைப் பருவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்றும் இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

அதிக நுண்ணறிவுத் திறன் கொண்ட மற்ற பிள்ளைகளுடன் மட்டும் பழகும் ஒரு சூழலை உருவாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று திருவாட்டி இந்திராணி கூறியிருந்தார்.