எஸ்ஜி நாசி லெமாக்: இருவர் மீது புதிய குற்றச்சாட்டு

ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் ‘டெலிகிராம்’ செயலி மூலம் பகிர்ந்துகொண்ட நால்வரில் இருவர் மீது நேற்று கூடுதலாக இன்னொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அப்டில்லா சபருதீன் (17) மற்றும் ஜஸ்டின் லீ ஹன் ஷி (19) ஆகிய இருவரும் தங்களின் கை பேசிகளில் ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் வைத்திருந்ததாக இப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் இருவரும் இக்குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இதன் தொடர்பில் நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

‘எஸ்ஜி நாசி லெமாக்’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட ஓர் உரையாடல் குழுவில் நால்வரும் உறுப்பினர்களாக இருந்தனர். 

கைதான நால்வரில் மற்ற இருவர், லெனர்ட் டியோ மின் சுவன் (26) மற்றும் லியோங் டின்வெய் (37).

ஆபாசக் காணொளிகளையும் காட்சிகளையும் பகிர்ந்துகொண்டதன் தொடர்பில் உரையாடல் குழுவுக்கு எதிராக இவ்வாண்டு மார்ச் 15க்கும் அக்டோபர் 3க்கும் இடைப்பட்ட காலத்தில் புகார்கள் எழுந்தன. உரையாடல் குழுவை நிர்வகித்து வந்ததாகக் கூறப்படும் டியோ மற்றும் லியோங் அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவர்.

கிட்டத்தட்ட 44,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்த அந்த உரையாடல் குழு, தற்போது கலைக்கப்பட்டுள்ளது.