நோயாளி பற்றிய ரகசியத் தகவல்களைக் கசிந்ததன் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மனநல மருத்துவர் சூ ஷுவென் சியாங், தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறி நேற்று உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டை மீட்டுக்கொண்டது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சூ, தம் நோயாளி ஒருவர் பற்றிய ரகசியத் தகவல்களை வெளியிட்டதாக சிங்கப்பூர் மருத்துவ மன்றம் குற்றம்சாட்டி மறுஆய்வு செய்யக் கோரியிருந்தது.
நோயாளி தற்கொலை எண்ணம் கொண்டவர் என்று கூறி மனநல மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல டாக்டர் சூவின் கடிதம் தேவைப்படுவதாக நோயாளியின் கணவர் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கான கடிதத்தை டாக்டர் சூ எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் நோயாளியின் சகோதரர் கைக்குக் கடிதம் சென்றதால், நோயாளிக்கு எதிராக அவரின் மகனுக்குத் தனிநபர் பாதுகாப்பு ஆணையைக் குடும்ப நீதிமன்றம் பிறப்பிக்க அக்கடிதம் பயன்படுத்தப்பட்டது.
அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் மருத்தவர் தரும் கடிதம், இவ்வாறு வேறு விவகாரத்திற்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதற்கு மருத்துவர் காரணமல்ல என்று கூறப்பட்டது.

