தன்மீது இருந்த கொலைக் குற்றச்சாட்டு, தாக்குதல் குற்றச்சாட்டாக குறைக்கப்பட்டதைக் கேட்டதும் நெட்டலி சியாவ் யு ஸென், 23, (படம்) கண்ணீர்விட்டு அழுததாக அவரின் தற்காப்பு வழக்கறிஞர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் நேற்று கூறினார்.
இவ்வாண்டு ஜூலை 2ஆம் தேதியன்று ஆர்ச்சர்ட் டவர்ஸில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 31 வயதுடைய சத்தீஷ் நோவல் கோபிதாஸ் உயிரிழந்தார்.
அவரைத் தாக்கிய எழுவர் கொண்ட கும்பலில் சியாவ் மட்டுமே பெண்.
காலை சுமார் 6.30 மணிக்கு நடந்த தாக்குதல் சம்பவத்தில் சியாவ்வுடன் மேலும் மூன்று ஆண்கள் சேர்ந்து சத்தீஷைக் குத்தியதாகவும் உதைத்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் கூறின.
தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரை சிறைத் தண்டனையும் $5000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆனால் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
தாக்குதலை அடுத்து டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சத்தீஷ், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உயிரிழந்தார்.
நேற்று நீதிமன்ற விசாரணையை அடுத்து, அரசுதரப்பு வழக்கறிஞர்கள் சியாவ் மீது இருந்த கொலைக் குற்றச்சாட்டைத் தாக்குதல் குற்றச்சாட்டாகக் குறைக்க ஒப்புக்கொண்டதைக் கேட்டு சியாவ் அழுததாகவும் அரசு தரப்பு தம் வேண்டுகோளுக்கு இணங்கியதற்குத் தாம் நன்றியுடன் இருப்பதாகவும் சியாவின் வழக்கறிஞர் திரு கில் கூறினார்.
வீட்டுக்குச் சென்று தன் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க விரும்பிய சியாவ், இவ்வழக்கு தொடர்பில் தன் முழு ஒத்துழைப்பையும் வழங்குவார் என்றும் திரு கில் உறுதி அளித்தார்.
$15000 பிணையில் நேற்று விடுவிக்கப்பட்ட சியாவ், இம்மாதம் 25ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவார்.

