சிங்கப்பூரும் சீனாவும் அவற்றுக்கிடையிலான தற்காப்பு உடன்படிக்கையை மேம்படுத்தியுள்ளன.
இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையே உயர்மட்ட கலந்துரையாடல்களும் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளும் அடிக்கடி நடத்தப்படும்.
இந்தப் பயிற்சிகளில் இரு நாடுகளின் ராணுவம், கடற்படை, ஆகாயப் படை ஆகியவை பங்கு பெறும்.
புதிய ஒப்பந்தம் ஒன்றின்கீழ் சீன வீரர்கள் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர் வீரர்கள் சீனாவுக்கும் செல்வர்.
அத்துடன் பரஸ்பரத் தளவாட ஆதரவுக்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட தற்காப்புப் பரிமாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மேம்பாடாக இந்தப் புதிய உடன்படிக்கை காணப் படுகிறது.
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் சீனத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹேவும் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நாளை சியாங்ஷான் மாநாடு எனப்படும் சீனாவின் வருடாந்திரப் பாதுகாப்பு மாநாட்டில் அமைச்சர் இங் உரையாற்றுகிறார். அதற்கு முன்னதாக புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அடிக்கடி நடத்தப்படும் அமைச்சர் நிலைக் கூட்டங்கள் ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரின் வருடாந்திர ஷங்ரிலா உரையாடல் போன்ற பலதரப்பு மாநாடுகளுக்குத் தங்கள் உயர் தற்காப்பு அதிகாரிகளை அனுப்பிவைக்க சீனாவும் சிங்கப்பூரும் இணங்கியுள்ளன. ராணுவ கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் இடையே கல்வி நிலைப் பரிமாற்றங்கள் இடம்பெறும். இருதரப்பு அவசர அழைப்பு தொலைபேசி சேவையும் ஏற்படுத்தப்படும். சியாங்ஷான் மாநாட்டை சீனா ஒன்பதாவது முறையாக நடத்துகிறது.
இதில் டாக்டர் இங் நான்காவது முறையாக உரையாற்ற இருக்கிறார். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூரின் உயர் மட்ட ஷங்ரிலா உரையாடலுக்கு சீனா அதன் உயர் அதிகாரிகளை அவ்வளவாக அனுப்பியதில்லை.
ஆனால் இந்த ஆண்டில் நிலைமை மாறியது. சீனத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் கலந்துகொண்டார்.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஷங்ரிலா உரையாடலில் சீனத் தற்காப்பு அமைச்சர் கலந்துகொண்டது அதுவே முதல்முறை.
இவ்வட்டாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டித்தன்மை அதிகரித்து வரும் வேளையில் ஜெனரல் வெய் ஷங்ரிலா உரையாடலில் கலந்துகொண்டார்.
கடந்த ஆண்டு ஆசியானுக்கு சிங்கப்பூர் தலைமை தாங்கியபோது ஆசியானும் சீனாவும் இணைந்து முதல்முறையாகக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே தற்காப்பு, இருதரப்பு உறவுகள் வளர்ந்து வருவதை டாக்டர் இங்கின் சீனப் பயணம் பிரதிபலிப்பதாக தற்காப்பு அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் தற்காப்பு தொடர்பான அரசதந்திர முயற்சிகள் தென்கிழக்காசிய நாடுகளில் அதிகரித்திருப்பதாக ராணுவ விவகாரங்கள் நிபுணர் டாக்டர் கொலின் கோ தெரிவித்தார்.
சீன ராணுவத்துடன் சிங்கப்பூர் நெருங்கிய உறவு வைத்திருக்கும் அதே வேளையில் அமெரிக்காவுடன் இருக்கும் நீண்டநாள் ஒத்துழைப்பு பாதிப்படையாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்றார் டாக்டர் கோ.

