தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி அண்மையில் 12 பேர் மலேசியாவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் தாங்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பாதுகாப்புச் சட்டங்களின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்க்க ஆள் கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஐவரின் வழக்கறிஞர்கள் ஆட்கொணர்வு மனுக்களை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வர் என ஜனநாயக செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான ராம்கர்பால் சிங் நேற்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது. குறிப்பாக, சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரை விடுவிக்க இந்த மனு பயன்படுத்தப்படுகிறது.
கைதானவர்களில் ஜனநாயக செயல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் என்று போலிசார் தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க இவர்கள் முயன்றதாகவும் அதற்காகப் பணம் வசூலித்து வந்ததாகவும் நம்பப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கையால் ஜனநாயக செயல் கட்சிக்கும் பிரதமர் மகாதீர் முகம்மதின் நிர்வாகத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் குற்றமும் புரியவில்லை என்று ஜனநாயகச் செயல் கட்சி கூறியது.
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரனும் மலாக்கா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதனும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
இவர்கள் இருவருடன் எஸ். சந்துரு, வி. சுரேஷ்குமார், எஸ். அரவிந்தன் ஆகியோர் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரி விக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் மலேசியாவுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்படக்கூடும் என்று மலேசிய போலிசார் தெரிவித்துள்ளனர்.
மலேசிய அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேச சீமான் பலமுறை மலேசியா சென்றுள்ளதாக அறியப்படுகிறது.

