சொத்து முகவர் மன்றத்தின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக பிராப்நெக்ஸ் சொத்துச் சந்தை நிறுவன முகவர் கூ பிங் சுவான் ஜேம்ஸ் ஈதனுக்கு $30,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஓராண்டுகாலத்திற்கு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கூக்கு விதிக்கப்பட்ட தண்டனை, சொத்து முகவர் மன்றம் இதுவரை விதித்த ஆகப் பெரிய தண்டனையாகக் கருதப்படுகிறது.
39 வயதாகும் கூ, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் கொன்டோமினிய வீடு ஒன்றை வாங்க விரும்பிய வாடிக்கையாளர் ஒருவருக்கு சரியான முறையில் சேவை வழங்கவில்லை என்று சொத்து முகவர் மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூவும் அவரது வாடிக்கையாளரும் வீடு ஒன்றைப் பார்த்தனர். வீட்டை $1.04 மில்லியனுக்கு விற்க விரும்புவதாக அந்த வீட்டின் விற்பனையாளர் கூறினார்.
அதன் பின்னர், வீட்டை விற்பவர் $1.02 மில்லியனுக்கு வீட்டை விற்க முன்வந்ததை அவரது முகவர் கூவிடம் தெரிவித்தார். ஆனால், வீட்டை வாங்கவிருந்தவரிடம் கூ அந்த தகவலைத் தெரிவிக்கவில்லை. கூவின் தவறான நடத்தையால் வீட்டை வாங்கியவருக்கு $20,000 முதல் $30,000 வரை இழப்பு ஏற்பட்டது.

