பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை உலக நாடுகள் புறக்கணிக்க முடியாது என சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
"பருவநிலை மாற்றம் சவால் விடுக்கும் வேளையில், இப்பிரச்சினையிலிருந்து நமது கவனத்தை சிதறவிடக்கூடாது. இல்லையெனில், குடிமக்கள் இப்பிரச்சினையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபடுவர்," என்று அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் பருவநிலை அறிவியல் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிங்கப்பூரில் நேற்று ஒன்றுகூடினர்.
பருவநிலை மாற்றம் தொடர்பில் அரசாங்க நிலை குழு (ஐபிசிசி) சந்திப்பை முன்னிட்டு திரு மசகோஸ் ஆற்றிய உரை ஒன்றில் இக்கருத்தை முன்வைத்தார்.
உலகம் முழுக்க உள்ள குடிமக்கள், குறிப்பாக இளையர்கள், பருவநிலை மாற்றத்தைத் தாங்கள் சந்திக்கும் முக்கிய விவகாரமாக கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு, ஹோங் லிம் பூங்காவில் கடந்த மாதம் சிங்கப்பூரின் முதல் பருவநிலை மாற்றம் தொடர்பான பேரணி நடைபெற்றதை அவர் சுட்டினார்.
"பருவநிலை மாற்றம் என வரும்போது, மக்களின் அக்கறையை நாங்கள் முக்கியமானதாக கருதுகிறோம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
"இந்தச் சவாலை எதிர்கொள்ள மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது எங்களது பொறுப்பு," என்றார் திரு மசகோஸ்.
ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா மாநாட்டு நிலையத்தில் ஐபிசிசியைச் சேர்ந்த ஏறத்தாழ 80 நிபுணர்கள் ஒன்றுதிரண்டனர்.
இன்றும் அடுத்த இரு நாட்களுக்கும் இந்நிகழ்வு நடக்கும்.
முக்கியமான தருணத்தில் இங்கு ஐபிசிசி சந்திப்பு நடைபெறுவதைச் சுட்டிய திரு மசகோஸ், பருவநிலை மாற்றம் பலதரப்பு விவகாரம் என்று குறிப்பிட்டார். அதற்கு உலகளாவிய, வலுவான பதில் நடவடிக்கை தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
ஆனால், தன்னைப்பேணித்தனம் உள்ளிட்ட காரணங்களால் இந்த பலதரப்பு முறை சோதனைக்கு உள்ளாவதாக திரு மசகோஸ் கூறினார்.
"பருவநிலை மாற்றம் குறித்த கவலையும் விழிப்புணர்வும் அதிகரித்துள்ள அதே வேளையில், நிலத்துக்காக காடுகள் எரிக்கப்படுவதையும் எரிசத்தி உற்பத்திக்காக நிலக்கரியைப் பயன்படுத்தப்படுவதையும் சில நாட்டு அரசாங்கங்கள் அனுமதிக்கின்றன," என்றார் அவர்.
நியூயார்க்கில் கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை தொடர்பான உச்சநிலை மாநாட்டில், இப்பிரச்சினைக்குப் பதில் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக திரு மசகோஸ் குறிப்பிட்டார்.

