தனிநபர் நடமாட்ட சாதன ஓட்டுநர்கள் காயமடையும் எண்ணிக்கை அதிகரிப்பு

தனிநபர் நடமாட்ட சாதன ஓட்டுநர்கள் காயமடையும் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
0014d547-809c-4a8d-a12a-43df75793b57
பொதுப் பாதையில் மின்ஸ்கூட்டரை பயன்படுத்தும் ஓட்டுநர்கள். படம்: பெரித்தா ஹரியான் -

டான் டோக் செங் மருத்துவமனை 33 மாதகாலமாக நடத்திய ஆய்வு ஒன்றில், காயம் காரணமாக மருத்துவமனைக்கு வரும் தனிநபர் நடமாட்ட சாதன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் கண்டறிந்துள்ளது.

இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், காயம் காரணமாக 79 தனிநபர் நடமாட்ட சாதன ஓட்டுநர்கள் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 87ஆகவும் 2017ல் அது 47ஆகவும் இருந்தது. அதாவது, ஈராண்டு காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 70 விழுக்காடு கூடியுள்ளது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வோங் திங் ஹுவே, இவ்வாண்டு தொடக்கத்தில் தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை நடத்தினார்.

சைக்கிள் போன்ற மிதிவண்டிகளுடன் ஒப்புநோக்க, தனிநபர் நடமாட்ட சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு காயத்தின் காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்படுவதற்கான சாத்தியம் இரு மடங்கு அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு கண்டறிந்தது.

அந்த ஆய்வைத் தொடர்ந்து டான் டோக் செங் மருத்துவமனை மேற்கண்ட இந்த தகவலை அளித்துள்ளது.

காயமடைந்த தனிநபர் நடமாட்ட சாதன ஓட்டுநர்களில் பாதிக்கும் அதிகமானோர் 20 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அம்மருத்துவமனையின் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இவற்றில் தலை, கழுத்து காயங்களே 41 விழுக்காடு அங்கம் வகித்தன.

அதற்கு அடுத்த நிலையில், சிராய்ப்பு போன்ற வெளிக்காயங்கள் 26 விழுக்காடும் முகக் காயங்கள் 12 விழுக்காடும் அங்கம் வகித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பகுதியினருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. ஆய்வு நடத்தப்பட்ட காலகட்டத்தில் ஆறு உயிரிழப்புச் சம்பவங்களும் ஏற்பட்டன.

இவ்வாண்டு பிப்ரவரியில், நடைபாதைகளில் தனிநபர் நடமாட்ட சாதனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 15 கிலோ மீட்டரிலிருந்து மணிக்கு 10 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது.

டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டியோ லி செர்ங், "மோட்டார்சைக்கிள்களின் வேகத்தைவிட தனிநபர் நடமாட்ட சாதனங்களின் வேகம் குறைவாக இருந்தபோதிலும், நடமாட்ட சாதனங்களை ஓட்டுவோருக்கு ஏற்படும் காயங்களின் கடுமை மோட்டார்சைக்கிளோட்டிக்கு ஏற்படும் காயத்திற்கு ஈடானது," என்றார்.